திருப்பூர்;'தக்காளி விலை உயர்ந்துள்ளதால், இனி, நாம் கூவி விற்க வேண்டியதில்லை. வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வரட்டும்,' என, தக்காளி வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூன் முதல் வாரம் கிலோ, 25 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாக உயர்ந்த தக்காளி, பத்து நாட்களுக்கு முன், 60 ரூபாயை எட்டி பிடித்தது.நேற்று, உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் ஒரு கிலோ முதல் தர தக்காளி, 75 ரூபாய்க்கு விற்றதால், வாடிக்கையாளர்கள் பலர் தக்காளியை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. எப்படியும் வரும் நாட்களில் தக்காளி விலை குறைய போவதில்லை என்பதால், அவர்களே, 'தேடி வரட்டும்' என விவசாயிகள், வியாபாரிகள் பலர் காத்திருந்தனர்.வழக்கமாக தக்காளி விலை குறையும் போது, விற்றுத்தீர வேண்டும் என்பதற்காக தக்காளியை 'கூவிக்கூவி' விற்க வியாபாரிகள் முயல்வர். தொடர் விலை உயர்வால், தக்காளி வியாபாரிகள் லாபத்தை எதிர்பார்த்து அமைதிகாக்கின்றனர். அதேநேரம், விலை உயர்வால், தக்காளி விற்பனை குறைவதால், தக்காளி தேக்கமாக துவங்கியுள்ளன. தள்ளு வண்டி கடையை காணோம்
தக்காளி விலை குறையும் போது, ஐந்து கிலோ, 100 ரூபாய்க்கு விற்க, தள்ளுவண்டி, ஆட்டோக்களில் வியாபாரிகள் போட்டி போடுவர். தக்காளி விலை உயர்வால், ஒரு வாரமாக, ஒன்றரை கிலோ, 100 ரூபாய்க்கு தக்காளி ஓரிரு இடங்களில் ரோட்டோரங்களில் விற்கப்பட்டது.முதல் தர தக்காளி விலை கிலோ, 70 ரூபாயை கடந்து விட்டதால், ஆட்டோ, ரோட்டோர விற்பனை இல்லை. ஓரிரு நாட்களுக்கு மட்டும் தாங்கும், மூன்றாம் தர கர்நாடகா, மைசூரு தக்காளிகளை வாங்கி வந்து சிலர், இரண்டு கிலோ, 100 ரூபாய்க்கு விற்கின்றனர்.