உடுமலை;உடுமலை நகரில், விதிமுறைகளை மீறி, அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து, விபத்துகளை தவிர்க்க வேண்டும்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலை நகரில், போக்குவரத்து கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டாலும், நெரிசல் குறையவில்லை. இதற்கு, நகரப்பகுதியில், விதிகளை மீறும், வாகனங்களே முக்கிய காரணமாக உள்ளன.பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு பகுதி, சிக்னல் இல்லாத ரவுண்டானாவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், விதிமுறைகள் குறித்து, தெரியாமல், தாறுமாறாக இணைப்பு ரோடுகளில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வாகன ஓட்டுநர்களால், பிரச்னை உருவாகிறது.இதே போல், நகரில், ஒரே ஒரு தானியங்கி சிக்னல் அமைந்துள்ள, தளி ரோடு சந்திப்பிலும், விதிமீறலால் குளறுபடி ஏற்படுகிறது.சிக்னலை கவனிக்காமல், வேகமாக செல்லும் வாகன ஓட்டுநர்களால், பிறர், நிலைதடுமாறுகின்றனர். நகர எல்லைக்குள், 'ஸ்பீட் லிமிட்' விதிமுறையை யாரும் பின்பற்றுவதில்லை.நகருக்குள், 30 கி.மீ., வேகத்தில் பயணிக்க வேண்டும் என்ற விதிமுறையை, மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலையில் நகரம் அமைந்திருப்பதால், 'ஸ்பீட் லிமிட்', தெரியாமல் கனரக வாகனங்கள், தனியார் பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களும் அசுர வேகத்தில் செல்கின்றன.நகரப்பகுதியில் நடக்கும் பெரும்பாலான விபத்துகள் அதிக வேகத்தால் மட்டுமே ஏற்படுகிறது.இந்த விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து போலீசாருக்கு வேகத்தை அளவீடு செய்யும் 'ஸ்பீடு கன்', போன்ற கருவிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.நகர எல்லை பகுதியில் 'ஸ்பீட் லிமிட்' குறித்த தகவல் பலகைகளை வைக்க வேண்டும். தேவையான கருவிகளை வழங்கி விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.குறிப்பாக, திருவிழா காலங்களில், தளி ரோடு உள்ளிட்ட ரோடுகளில், சாகசங்களில் ஈடுபடும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால், நகருக்குள் நெரிசலையும், விபத்துகளையும் தவிர்க்க முடியும்.