உடுமலை: உடுமலை திருமூர்த்தி அணைக்கு, காண்டூர் கால்வாய் வழியாக, 3 மாதங்களுக்குப்பின் நீர்வரத்து துவங்கியது.பி.ஏ.பி., திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.திட்ட தொகுப்பு அணைகளில் சேகரிக்கப்படும் நீர், மலைப்பகுதிகளில், 49.3 கி.மீ., துாரம் உள்ள காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.திட்டத்தின் ஆதாரமாக உள்ள காண்டூர் கால்வாயில், விடுபட்ட பகுதிகள் புதுப்பிக்கும் பணி கடந்த மூன்று மாதமாக நடந்து வந்தது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, திட்ட தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.அதன் அடிப்படையில் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் மாலை, பரம்பிக்குளம், துாணக்கடவு வழியாக, சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையம் கொண்டு வந்து, மின் உற்பத்திக்குப்பிறகு காண்டூர் கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து துவங்கியது.கடந்த, ஏப்., 27ல், காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில், மூன்று மாதத்திற்கு பின், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. நீர் சேகரிக்கப்பட்ட பின்னர், வரும், 16ம் தேதி, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம்
திருமூர்த்தி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 28.37 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 793.67 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.அணைக்கு, பாலாறு வழியாக, வினாடிக்கு, 14 கனஅடி நீரும், காண்டூர் கால்வாய் வழியாக, 97 கனஅடி நீரும் வரத்து இருந்தது. படிப்படியாக நீர்வரத்து, அதிகரித்து, நேற்று மாலை, 570 கனஅடியாக உயர்ந்தது.