உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / களைகட்டும் சண்டே மார்க்கெட்

களைகட்டும் சண்டே மார்க்கெட்

திருப்பூர்;திருப்பூர், நஞ்சப்பா பள்ளி சாலையில், ஞாயிற்றுக்கிழமைதோறும் பின்னலாடை விற்பனை பரபரப்புடன் களைகட்டுகிறது.திருப்பூர் காதர்பேட்டை பகுதி, பின்னலாடைத் தொழிலுக்கு 'இதயம்' போன்றது. ஏற்றுமதி நிறுவனங்களில் உபரியாகும் ஆயத்த ஆடைகள், மொத்த விற்பனை இங்குதான் நடக்கிறது. மும்பை, ராஜஸ்தான், டில்லி, ஆமதாபாத், சூரத், ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு தேவையான ஆடைகளும் இங்குதான் கொள்முதல் செய்யப்படுகின்றன.

தயாராகும்பின்னலாடைகள்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இயங்கும் உற்பத்தியாளர்களிடம், ஆர்டர் கொடுத்து, பல்வகை பின்னலாடைகள் தயார் செய்யப் படுகின்றன. அவை, காதர்பேட்டையில் உள்ள கடைகள் வாயிலாக, மொத்த விற்பனை செய்யப்படுகிறது.

குவியும் தொழிலாளர்கள்

அவற்றை, சில்லரை விற்பனை செய்யும் வியாபாரிகள் வாங்கி, விற்பனை செய்து வருகின்றனர். திருப்பூர் பகுதியில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை, ஆடைகளை வாங்குவதற்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதற்காக, காதர்பேட்டையைச் சுற்றி வருகின்றனர். காதர்பேட்டைக்கு வரும் வெளியூர் மக்களும், தேவையான பின்னலாடைகளை வாங்கிச்செல்கின்றனர்.கொரோனாவுக்கு பிறகு, சிறிய யூனிட் வைத்திருக்கும் சிறு உற்பத்தியாளர்களும், பின்னலாடை வியாபாரிகளும், காதர்பேட்டை சுற்றுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடை விரித்து, விற்பனை செய்கின்றனர்.நாளுக்கு நாள், ஞாயிற்றுக்கிழமை சில்லரை விற்பனை அதிகரித்து வந்ததால், காதர்பேட்டையில் உள்ள மொத்த வியாபாரிகளும், ஞாயிற்றுக்கிழமை மட்டும், சிறிய பெல்ட் கட்டிலை விரித்து, சில்லரை விற்பனை செய்யவும் தயாராகிவிட்டனர். நஞ்சப்பா பள்ளி முதல், காதர்பேட்டை பள்ளி வரை, ஞாயிற்றுக்கிழமை, தேர்வீதி போல் மாறிவிடுகிறது.குறு, சிறு பனியன் வியாபாரிகள், ஞாயிற்றுக்கிழமை மட்டும், குடும்ப சகிதமாக வந்து, கடை விரித்து, ஆடை விற்பனை நடத்த துவங்கிவிட்டனர். இதன் காரணமாக, திங்கட்கிழமை கூட விடுமுறை எடுத்து இளைப்பாறுகின்றனர்.

மலிவுவிலையில்அள்ளலாம்

'ஸ்மார்ட் சிட்டி' ரோடு அமைத்த பிறகு, பிளார்ட்பாரம் ஓரத்தில் பெல்ட் கட்டில்களை விரித்து, ஆடை விற்பனை நடப்பது அதிகமாகிவிட்டது. காதர்பேட்டை என்பது, மொத்த பின்னலாடை விற்பனைக்கு பெயர்போன இடம் என்ற நிலைமாறிவிட்டது.ஞாயிற்றுக்கிழமை சென்றால், குழந்தைகள், சிறுவர் - சிறுமியர், இளைஞர்கள், பெண்கள் என, அனைவருக்குமான பின்னலாடைகளை 20 ரூபாய் முதல், 200 ரூபாய் வரையிலான மலிவு விலையில்அள்ளிச்செல்லலாம் என்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.பனியன் மார்க்கெட் என்னாச்சு?திருப்பூர் பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவது போல், விற்பனைக்கு உதவ யாரும் தயாரில்லை. கடந்த, 40 ஆண்டு களாக பின்னலாடை தொழில் கொடிகட்டி பறந்தாலும், உள்ளூரில் பின்னலாடை (பனியன்) மார்க்கெட் இல்லை. மாநகராட்சி அல்லது அரசு சார்பில், பனியன் மார்க்கெட் அமைத்து, குறு, சிறு வியாபாரிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாகவே தொடர்கிறது. ஒருங்கிணைந்த பனியன் மார்க்கெட் அமையும் போது, எப்பகுதி மக்களாக இருந்தாலும், நேரில் வந்து, தேவையான பனியன் ஆடைகளை வாங்கி செல்ல ஏதுவாக இருக்கும்; குறு, சிறு வியாபாரிகளும் பயன்பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி