| ADDED : மே 03, 2024 11:36 PM
திருப்பூர்;திருப்பூர் நகரை சுற்றியுள்ள கிராமப்புறங்களில், ஏராளமான இடங்களில் 'லே அவுட்'கள் உள்ளன. இதில், பல 'லே அவுட்'கள், 'டி.டி.சி.பி.,' அல்லது 'எல்.பி.ஏ.,' அங்கீரகாரம் பெறாமல் உள்ளன. பல ஊராட்சிகளில் அங்கீகாரம் பெறாத 'லே அவுட்'கள் கூட உள்ளன.அங்கீகாரம் பெற்ற 'லே-அவுட்'களில் அரசு விதிப்படி, 10 சதவீதம் 'ரிசர்வ் சைட்' இடம் ஒதுக்கப்படுகிறது. அதாவது, 10 ஏக்கரில் 'லே அவுட்' அமைக்கப்படும் பட்சத்தில், அங்கு ஒரு ஏக்கர் நிலம் 'ரிசர்வ் சைட்'டாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் வசம் ஒப்படைக்கப்படும்.அங்கு பூங்கா, குடிநீர் தொட்டி உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த முடியும்; சில இடங்களில் அழகிய பூங்காக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கீகாரம் பெறாத 'லே அவுட்'களில், 'ரிசர்வ் சைட்' எங்கிருக்கிறது என்பதை தேட வேண்டியிருக்கிறது.பசுமை ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், 'மாவட்டத்தின் நகர, ஊரகப் பகுதிகளில் 'ரிசர்வ் சைட்'கள் முறையாக உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. சில இடங்களில், 'ரிசர்வ் சைட்'கள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளன.பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதியில் உள்ள 'லே அவுட்'களில் உள்ள அங்கீகார விபரம் மற்றும் 'ரிசர்வ் சைட்' குறித்த விபரங்களை வெளிப்படையாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். 'ரிசர்வ் சைட்'களை மீட்டெடுத்து, அங்கு பசுமை போர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட வேண்டும்,'' என்றனர்.