| ADDED : ஜூன் 18, 2024 11:28 PM
பல்லடம்;சாக்கடையை முன் வைத்தும் அரசியல் நடப்பதாக, பல்லடம் நகராட்சி பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.பல்லடம் நகராட்சி, 8வது வார்டு பனப்பாளையம் பகுதியில், நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில், மழைநீர் வடிகால் சரியாக துார்வாரப்படாததால், கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்புக்குள்ளாகி வருவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.இதற்கிடையே, இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் சிலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மக்களே களமிறங்கி சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:ஊரில் உள்ள ஒட்டு மொத்த கழிவு நீரும் இப் பகுதியில் வந்து தேங்குகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.கழிவு நீர் நிரம்பி வீடுகளுக்குள்ளும் செல்வதால், சொல்ல முடியாத இன்னல்களை சந்தித்து வருகிறோம். குழந்தைகள், பெரியவர்கள் அடிக்கடி நோய்வாய்ப் படுகின்றனர்.நீண்ட நாட்களாக சாக்கடை துார்வாரப்படாததால், குப்பைகள், கழிவுகள் அடைத்து, கழிவுநீர் வீதிகளில் தேங்கி நிற்கிறது. எனவே, நாங்களே சுத்தம் செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பொதுமக்களே சாக்கடையை சுத்தம் செய்வதை அறிந்த நகராட்சி நிர்வாகம், துாய்மை பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்தியது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சுடர் வெளியிடம் கேட்டதற்கு, 'இங்குள்ள குழந்தைகள் இருவருக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இருப்பினும், அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.சாக்கடையை துார்வார வேண்டும் என்பதுதான் இப்பகுதி பொதுமக்களின் பிராதான கோரிக்கையாக உள்ளது என்றார்.