| ADDED : ஜூன் 26, 2024 01:05 AM
பல்லடம்;பல்லடம் தாலுகா அலுவலகத்தில், சாமளாபுரம் உள் வட்டத்துக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் கனகராஜ் தலைமையில் நேற்று நடந்தது.அதில் பங்கேற்று மனு அளித்த நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பிரதானமாக உள்ள நொய்யல் ஆற்றில், அனைத்து விதமான கழிவுகளும் கலக்கப்படுகின்றன. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இருப்பது எதற்கு என்பது தெரியவில்லை. அந்த வாரியத்தை பேசாமல் மூடி விடுவது நல்லது. நொய்யல் என்பது ஆறா? அல்லது சாக்கடையா என்று தெரியாத நிலை ஏற்பட்டு வருகிறது.இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நொய்யலில் மழை நீரை தவிர்த்து கழிவுகளை கலப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுங்கள். தாலுகா அலுவலகங்களில் உள்ள புரோக்கர்களை வெளியேற்றுங்கள். சில வருவாய் துறை அலுவலர்கள், ரியல் எஸ்டேட் மாபியாக்களுடன் சேர்ந்து கொண்டு, அளவு கடந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏற்கனவே, பல்லடம் தாலுகா அலுவலகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆதாரத்துடன் நிரூபிக்க எங்களால் முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.