திருப்பூர் : திருமுருகன்பூண்டி நகராட்சியில் மக்கள் தொகைக்கேற்ப நீர் வினியோகம் இல்லாததால் மக்கள் பாதிக்கின்றனர். மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை ஆதாரமாக கொண்ட 2வது குடிநீர் திட்டம், புதிய திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக நீர் வினியோகிக்கப்படுகிறது. இருப்பினும், தேவையான அளவு குடிநீர் மக்களுக்கு கிடைப்பதில்லை.இதுகுறித்து, நகராட்சி தலைவர் குமார், துறை அமைச்சர் நேருவை சந்தித்து முறையிட, உரிய ஏற்பாடு செய்யும்படி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.அதன் விளைவாக, குடிநீர் வடிகால் வாரிய கோவை மண்டல நிர்வாக பொறியாளர் மீரா, செயற் பொறியாளர் அன்பழகன் ஆகியோர், கள ஆய்வில் ஈடுபட்டனர். நகராட்சி தலைவர் குமார், நகராட்சி பொறியாளர் நக்கீரன் ஆகியோர், நகராட்சி மக்களின் நீர்தேவை மற்றும் தற்போதைய வினியோகம் தொடர்பான விளக்கங்களை அளித்தனர்.நகராட்சி தலைவர் கூறியதாவது:இரண்டாவது குடிநீர் திட்டத்தில் இருந்து, அணைப்புதுார் பஸ் ஸ்டாப் துவங்கி, ராக்கியாபாளையம் செல்லும் ரோடு வரை குழாய் இணைப்பு வழங்கி, குடிநீர் வினியோகிக்க வேண்டும். இதனால், ராக்கியாபாளையம், தேவராயம்பாளையம் மக்கள் பயன்பெறுவர்.வி.ஜி.வி., கார்டன் பகுதியில் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி கட்டி, அதற்கு நீர் வினியோகிக்கும் பட்சத்தில், அப்பகுதியை சுற்றியுள்ள மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். தினமும், 50 லட்சம் லிட்டர் நீர் வினியோகிக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.