| ADDED : மே 15, 2024 12:47 AM
திருப்பூர்:விதிமீறி, எவ்வித அனுமதியுமின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள், சூறைக்காற்றுக்கு விழுந்தன; அதிர்ஷ்டவசமாக யாருக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை.அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி துவங்கி, 30 நிமிடத்துக்கும் மேல், பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுழற்றி அடித்த சூறைக்காற்றுக்கு, ஏராளமான மரங்கள் சாய்ந்தன; மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது விழுந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.அதோடு, நகரின் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பெரிய 'பிளக்ஸ் பேனர்'கள் காற்றுக்கு சாய்ந்தன. இரவு நேரம் என்பதால், யாருக்கும் எந்த விபரீதமும் ஏற்படவில்லை. இதுபோன்ற பேனர்கள், டூவீலரில் செல்வேர், பாதசாரிகள் மீது விழுந்து, உயிர் சேதத்தை கூட ஏற்படுத்துகிறது என்பதால் தான், பிளக்ஸ் பேனர் வைக்க அரசு தடை விதித்திருக்கிறது.இருப்பினும், ஆங்காங்கே தடையை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால், விபரீதம் ஏற்படும் வாய்ப்பு தான் அதிகம். எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் உரிய வழிகாட்டுதல்களை, உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு வழங்க வேண்டும்.