திருப்பூர்;பஸ் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த லட்டைக் கொடுத்து கைவரிசை காட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் பாப்பாத்தி, 52. கடந்த ஜன., 7ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து அரசு பஸ்சில் சொந்த வேலை காரணமாக திருப்பூர் மாவட்டம், தாராபுரத்துக்கு புறப்பட்டார். அருகே அமர்ந்திருந்த பெண் ஒருவர், மயக்கமருந்து கலந்த லட்டை சாப்பிட கொடுத்து, பாப்பாத்தி அணிந்திருந்த, இரண்டரை சவரன் நகையை பறித்து சென்றார். தாராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, அரசு பஸ் வந்த ரோட்டில் இருந்த பஸ் ஸ்டாப்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டனர். சந்தேகப்படும் விதமாக பஸ்சில் இருந்து இறங்கிய பெண், பின்னால் வந்த டூவீலரில் ஏறி புறப்பட்டு சென்றதை கண்டறிந்தனர்.இதுதொடர்பாக, நாமக்கல், சேந்தமங்கலத்தை சேர்ந்த ராணி, 50, விருதுநகரை சேர்ந்த பரமேஸ்வரன், 50 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரும் கள்ளக்காதல் ஜோடி என தெரியவந்தது.இருவரும், பல இடங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளனர். பயணிகளிடம் கைவரிசை காட்ட, ராணியை மட்டும் பஸ்சில் அனுப்பி விட்டு, பஸ்சின் பின்னால் டூவீலரில் பரமேஸ்வரன் வருவார். ராணி, பயணியிடம் பேச்சுக்கொடுப்பார். பேரன் பிறந்தநாள் எனக் கூறி, மயக்க மருந்து கலந்த லட்டை பயணியிடம் கொடுப்பார். சந்தேகம் வராதிருக்க தானும் ஒரு லட்டை சாப்பிடுவார்; மயக்கமடைந்ததும் பயணியிடம் நகை உள்ளிட்ட உடைமைகளை ராணி எடுத்துக்கொள்வார். பஸ்சில் இருந்து இறங்கி, பின்னால் டூவீலரில் பரமேஸ்வரனுடன் தப்பிவிடுவார். இருவரையும் கைது செய்து, இரண்டரை சவரன் நகை, டூவீலர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.