உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / "வாட் வரி விதிப்பால் நெருக்கடி உருவாகும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை

"வாட் வரி விதிப்பால் நெருக்கடி உருவாகும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை

திருப்பூர் : 'காடா துணிகளுக்கு ஐந்து சதவீத 'வாட்' வரி விதிக்கப்பட்டுள்ளதால், விசைத்தறி தொழிலுக்கு கடும் நெருக்கடி உருவாகும்,' என, திருப்பூர் மாவட்ட விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. திருப்பூர், கோவை மாவட்ட பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் உற்பத்தியாகும் காடா துணிகளை 'பிராசசிங்' செய்து, பல்வேறு ஜவுளி தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. பெரும்பாலான விசைத்தறி ஜவுளி பொருட்களுக்கு நான்கு சதவீதம், சில பொருட்களுக்கு மட்டும் 12.5 சதவீதம் 'வாட்' வரி விதிக்கப்பட்டிருந்தது. உற்பத்தியாகும் காடா துணிகளுக்கு வரி விதிக்கப்படவில்லை. ஏற்கனவே, நூல் விலை நிர்ணயத்தால், விசைத்தறி தொழிலில் பெரும் தடுமாற்றத்தில் உள்ளது. இந்நிலையில், வரி விதிப்பை அரசு உயர்த்தியிருப்பது விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க செயலாளர் துரைசாமி கூறியதாவது: விசைத்தறி ஜவுளி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட நான்கு சதவீத வாட் வரி ஐந்து சதவீதமாகவும், 12.5 சதவீதமாக இருந்த சில பொருட்களுக்கு 14.5 சதவீதமாகவும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை காடா துணிகளுக்கு வரி இல்லை; தற்போது புதிதாக ஐந்து சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. தொழிலில் ஏற்பட்டு வரும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு சதவீத வாட் வரியை குறைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். வரியை ஐந்து சதவீதமாக உயர்த்தியதுடன், காடா துணிக்கும் ஐந்து சதவீத வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் காரணமாக, விசைத்தறி தொழில் கடும் நெருக்கடிக்கு ஆளாகும். குடிசை தொழிலாக செய்து வரும் சிறு உற்பத்தியாளர்கள் சமாளிக்க முடியாமல் தவிப்பர்.ஒட்டுமொத்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுவர். எனவே, காடா துணி மீதான வரி விதிப்பை தள்ளுபடிசெய்யவும், 'வாட்' வரியில் இருந்து விசைத்தறி தொழிலுக்கு தமிழகஅரசு விலக்கு அளிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை