உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 350 ஆண்டு பழமையான வாமனர் சிற்பம் கண்டெடுப்பு

350 ஆண்டு பழமையான வாமனர் சிற்பம் கண்டெடுப்பு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் உட்பட கொங்கு மண்டலத்தில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் உள்ளன. இதில், திருப்பூர் அருகே பொங்குபாளையத்தில், வாமனரின் புடைப்பு சிற்பம், கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டது.தற்போது அதை பாதுகாத்து, மக்கள் வழிபட்டு வருகின்றனர். இது குறித்து, திருப்பூர், வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:கடந்த 300 - 350 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வைணவர்கள், வைணவ மத தத்துவங்களை மக்களிடம் எடுத்துக்கூறி, மக்களை நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் இந்த வாமன சிற்பம் அமைந்திருக்கிறது.வாமன அவதாரம் என்பது வைணவர்கள் முழு முதற்கடவுளாக கருதும் விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம். ஒரு கையில் புனித நீர் உள்ள கமண்டலம், மற்றொரு கையில் குடை வைத்திருப்பது போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இதுபோன்ற சிற்பம், நடுகல் போன்றவை எங்கள் ஊரில் உள்ளன. அவற்றை வழிபடுவது ஆத்ம திருப்தியளிக்கிறது; எங்கள் முன்னோர், கண்முன் இருப்பது போன்றே உணர்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ