க ரூர், ஓசூர், சேலம், புதுக்கோட்டையில் நடைபெற உள்ள மாநில கலைத்திருவிழாவில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 446 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பாட்டு, நாட்டியம், நாடகம், கலை மற்றும் இலக்கியம் உள்ளிட்டவற்றில் தனித் திறமையை வெளிப்படுத்தும் மாணவ, மாணவியரை கண்டறிந்து, அவர்களுக்கு 'கலையரசன்', 'கலையரசி' விருது வழங்கி, ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்துகிறது. இதற்கு தகுதியான மாணவ, மாணவியரை தேர்வு செய்வதற்கான மாவட்ட கலைத்திருவிழா ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட கல்வித்துறை சார்பில், மாவட்ட கலைத்திருவிழா, நவ. 5 முதல் 7 வரை மூன்று நாட்கள் ஜெய்வாபாய், நஞ்சப்பா பள்ளியில் நடந்தது. வட்டார அளவிலான கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற, 1,367 பேர் தனிநபர், குழு பிரிவில் பங்கேற்று, அசத்தினர். இவர்களில் இருந்து மாநில போட்டிக்கு, 114 மாணவர்கள், 332 மாணவியர் என 446 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி கல்வித்துறை சார்பில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, கரூர், ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் மாநில கலைத்திருவிழா வரும், 25ம் தேதி நடக்கிறது. ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, ஓசூர் அதியமான் பொறியியல் கல்லுாரியிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, ஓசூர் எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லுாரியிலும், 26ம் தேதி கலைத்திருவிழா நடக்கிறது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பள்ளிகளுக்கு, சேலம், பத்மாவாணி மகளிர் கல்லுாரியிலும், பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பள்ளிகளுக்கு, புதுக்கோட்டை, ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் கந்தவர்கோட்டை வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளியில், வரும், 27ம் தேதி மாநில கலைத்திருவிழா நடக்கிறது; வரும், 28ம் தேதி மேல்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, கந்தவர்கோட்டை வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் மாநில கலைத்திருவிழா நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, துவக்கப்பள்ளி பிரிவில், 68 பேர், ஆறு முதல் எட்டாம் வகுப்பு பிரிவில், 63 பேர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பிரிவில், 159 பேர், மேல்நிலைப்பள்ளி பிரிவில், 156 பேர் உட்பட, 446 பேர் மாநில போட்டிக்கு செல்ல உள்ளனர். நாளை மறுதினம் (25ம் தேதி) போட்டிகள் துவங்க உள்ளது. நாளை பள்ளிகளில் இருந்து பொறுப்பு ஆசிரியர் குழுவுடன் மாணவ, மாணவியர் மாநில போட்டிக்கு பயணிக்க உள்ளனர்.