உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2,636 தொழில்முனைவோருக்கு ரூ.753.51 கோடி கடன் அனுமதி

2,636 தொழில்முனைவோருக்கு ரூ.753.51 கோடி கடன் அனுமதி

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த முகாமில், 2,636 தொழில்முனைவோருக்கு, பல்வேறு அரசு திட்டங்களில், 753.51 கோடி ரூபாய்க்கான வங்கி கடன் அனுமதி வழங்கப்பட்டது.குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கான கடன் முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெய்பீம் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த தொழில்முனைவோர் பங்கேற்று, புதிதாக தொழில் துவங்க, தொழில் விரிவாக்கத்துக்கு தேவையான கடன் கேட்டு விண்ணப்பங்கள் வழங்கினர்.ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி உட்பட பொதுத்துறை, தனியார் வங்கி அதிகாரிகள், கடன் விண்ணப்பங்களை பெற்றனர். மாவட்ட தொழில்மையம் சார்பில், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், நீட்ஸ், பி.எம்.இ.ஜி.பி., - பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டங்களில் தொழில்முனைவோர் 23 பேருக்கு, 2.50 கோடி ரூபாய் கடன் அனுமதி வழங்கப்பட்டது.அதேபோல், 'தாட்கோ', ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள், 'வாழ்ந்து காட்டுவோம்' இயக்கம் சார்பில், மானியத்துடன் கூடிய கடன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 89 பயனாளிகளுக்கு 190.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வங்கி கடன் அனுமதி வழங்கப்பட்டது. முகாமில், 2,636 தொழில்முனைவோருக்கு, மொத்தம் 753.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடன் அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.தொழில்முனைவோருக்கு கடன் அனுமதி கடிதம் வழங்கி, டி.ஆர்.ஓ., ஜெய்பீம் பேசுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பரிந்துரைத்த விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, வங்கி கடன் வழங்க வேண்டும்,' என்றார்.மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேலாளர் ரவி, மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் கிரீசன், கடன் உதவியாளர் முரளிதரன், 'தாட்கோ' மேலாளர் ரஞ்சித்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி