உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 800 ஆடுகள் கொலை தெரு நாய்கள் அட்டகாசம் விவசாயிகள் கண்ணீர்

800 ஆடுகள் கொலை தெரு நாய்கள் அட்டகாசம் விவசாயிகள் கண்ணீர்

திருப்பூர், ; ''திருப்பூர் மாவட்டத்தில் கடந்த பத்து மாதங்களில், 800க்கும் மேற்பட்ட ஆடுகள் தெருநாய்கள் தாக்கி பலியாகியுள்ளன. தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு புதிய கொள்கை முடிவு எடுக்க வேண்டும்'' என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.வெள்ளகோவில், காங்கயம், ஊத்துக்குளி, மடத்துக்குளம், தாராபுரம் பகுதிகளில், தெருநாய்கள் தாக்கி, ஆடுகள் கூட்டம் கூட்டமாக பலியாகின்றன; பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பலியான ஆடுகளுக்கு 45 நாட்களுக்குள் நிவாரணம் வழங்கப்படுமென, காங்கயம் தாசில்தார் எழுத்துபூர்வ உறுதியளித்தார். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். உறுதி அளித்து, 35 நாட்களாகிவிட்டதால், நிவாரணம் கோரும் கோரிக்கை தொடர்பான நடவடிக்கை விவரத்தை தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.கால்நடைத்துறை அதிகாரிகள், 'மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் நிவாரணம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது' என்றனர்.வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் பேசியதாவது:விவசாயிகளுக்கு விவசாயத்துக்கு அடுத்தபடியாக, ஆடு வளர்ப்பு பலரது வாழ்வாதாரமாக இருக்கிறது. தெருநாய்கள் கட்டுப்பாடின்றி புகுந்து தாக்குவதால், ஆடுகள் அதிக அளவு பலியாகின்றன; வளர்ப்பவர்கள் கடும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். ஆடுகளை தாக்கிய தெருநாய்கள், குழந்தைகளையும் தாக்க துவங்கிவிட்டது. தமிழக அரசு, விரைவாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.தெருநாய் கடித்து பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்குவது எனில், லட்சக்கணக்கான ரூபாய் வழங்கிக்கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். திருப்பூர் மாவட்டத்தில் மாதந்தோறும், 100 ஆடுகள் வரை பலியாகியுள்ளன. மொத்தமாக, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், கடந்த 10 மாதங்களில் 800க்கும் அதிகமான ஆடுகள் பலியாகியுள்ளன. தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில், அரசு புதிய கொள்கை முடிவு எடுக்க வேண்டும்; மாவட்ட நிர்வாகம் உரிய பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை