உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாடி வருவோருக்கு கோடியருளும் கோடீஸ்வரன்... சங்கடம் போக்கி சந்தோஷம் அருளும் சகஸ்ரலிங்கம் சங்கடம் போக்கி சந்தோஷம் அருளும் சகஸ்ரலிங்கம்

நாடி வருவோருக்கு கோடியருளும் கோடீஸ்வரன்... சங்கடம் போக்கி சந்தோஷம் அருளும் சகஸ்ரலிங்கம் சங்கடம் போக்கி சந்தோஷம் அருளும் சகஸ்ரலிங்கம்

நாடி வரும் பக்தர் களுக்கு கோடியருளை கொட்டிக்கொடுக்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சகஸ்ரலிங்க வடிவில், ஒன்றுக்கு ஆயிரமாக அள்ளிக்கொடுத்து வாழவைக்கிறார், சர்வலோகதயாரபன்.உலகில் தோன்றும் உயிர்களின் தலையாய கடமையாக இருப்பது, இறைவனை சென்றடைவதே! ஒவ்வொரு உயிர்களும், தன்னை வந்தடைவதற்கான வழிகளையும் இறைவனே வகுத்து கொடுத்துள்ளான். இறைவனை சென்றடைய, மனிதர்கள், தங்கள் உடலை சுற்றியுள்ள திருவாசி எனும் ஒளிவட்டத்தை செம்மைப்படுத்தி, விருத்தி செய்வது, ஆன்மீகத்தின் அரிச்சுவடியாக இருக்கிறது.சிவாலயங்களில் அருள்பாலிக்கும் சகஸ்ரலிங்க மூர்த்திகளே, நமது திருவாசிகளை துாய்மைப்படுத்த துணை புரிவர். சித்தர்கள் வழிகாட்டியபடி, சகஸ்ரக லிங்கத்தை வழிபட்டு, ஒளிவட்டத்தை விருத்தி செய்ய முடியும் என்று, அனேக இடங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில், மோட்சம் பெற்ற, ஆயிரம் சிவனடியார்களின் வடிவமே சகஸ்ரகலிங்கம் என்றும் புராணங்கள் கூறுகின்றன.அயோத்தியில் மீண்டும் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீராமபிரான் தான் முதன்முதலாக சகஸ்ரலிங்கம் நிர்மாணம் செய்து வழிபட்டதாலேயே, அகத்தியரிடம் மந்திர உபதேசம் பெற்றார்; ராவணனை அழித்து, சீதையை மீட்டார் என்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.சகஸ்ரலிங்கத்துக்கு நடத்தும் வழிபாடு, ஆயிரம் மடங்கு பலனளிக்கும் என்று, சிவாகம வழிபாட்டு முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரே ஆவுடையின் மீது, ஆயிரம் சிறிய லிங்க வடிவங்களுடன், அவிநாசி திருத்தலத்தில் சகஸ்ரலிங்கம் காட்சியளிக்கிறது.அவிநாசிலிங்கேஸ் வரர் கோவிலில், அறுபத்து மூவர் மண்டபம், தென்திசையில் இருக்கிறது. தென்மேற்கு மூலையில், கன்னிமூலை கணபதி, தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தின் மேற்புறம், கன்னிமூலை கணபதிக்கு அடுத்ததாக, சகஸ்ரலிங்க வடிவில், சர்வேஸ்வரன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.அதனையடுத்து, பிருத்வி லிங்கம், அப்புலிங்கம், தேயுலிங்கம், வாயுலிங்கம், ஆகாயலிங்கம் என்ற பெயர்களில், பஞ்சலிங்கமூர்த்திகள் கிழக்கு நோக்கியபடி காட்சியளிக்கின்றனர். அடுத்ததாக, தனி சன்னதியில் கஜலட்சுமி தாயார், செல்வ வளங்களை அள்ளிக்கொடுக்கும் திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். அதற்கு அடுத்து, வடமேற்கு மூலையில், செந்திலாண்டவர் அருளாட்சி புரிந்துகொண்டிருக்கிறார்.மூலவரை வழிபட்ட பின், சகஸ்ரலிங்கரை வழிபட்டு, தங்களது பிரார்த்தனை முன்வைத்தால், கூடிய வரைவில் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். அதன்படி, பெருங்கருணைநாயகியுடன், அவிநாசியப்பர் அருள்புரியும் அவிநாசி திருத்தலத்திலும், சகஸ்ரலிங்கமாக சர்வேஸ்வரன் பக்தர்களுக்கு அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறார்!இப்படியாக அவிநாசிலிங்கேஸ்வர் கோவில் மூலாலயம், இவ்வளவு அருட்செல்வங்கள் புடைசூழ அமைந்துள்ளது. பக்தர்களே... வாருங்கள்! சங்கடங்களை போக்கி, சந்தோஷம் அருளும் சகஸ்ரலிங்கத்தை கைதொழுவோம்... அவிநாசி ஈசனின் அருள்பெறுவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ