அடைப்பு கண்டறிய நவீன நுட்பம் தேவை
திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர் பேராசிரியர் வீரபத்மன் கூறியதாவது: கட்டமைப்பு இல்லை
பொதுவாக, பாதாளச் சாக்கடைக்குள் பொருத்தப்பட்டுள்ள குழாய் வாட்டமாக இருக்க வேண்டும்; அப்போது தான் கழிவுநீர் தடையின்றி வழிந்தோடி செல்லும்; அவை வெளியேற்றப்படும் இடத்தில் ஒரு சல்லடை அமைத்து, கழிவுகள் தேங்கும் வகையிலும், நீர் மட்டும் வெளியேறும் வகையிலும், கட்டமைப்பு இருக்க வேண்டும். சல்லடையில் தேங்கும் கழிவு அவ்வப்போது அகற்றப்பட வேண்டும். ஆனால், இந்த கட்டமைப்பு, திருப்பூரில் இருப்பதாக தெரியவில்லை. அதிநவீன தொழில்நுட்பம்
பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய, அதிநவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அதிநவீன சானிடரி மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெங்களூரு உள்ளிட்ட சில பெரு நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் சிறந்த முறையில் பயன் தருகிறது. இந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா வாயிலாக, பாதாள சாக்கடைக்குள் எங்கெங்கு அடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது; எங்கெங்கு அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்; அந்த இடங்களில் அடைப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து அதை சரி செய்யவும் முடியும்.இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக அமைய, மனித ஆற்றல் வாயிலாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை கட்டமைப்பு சரியான வாட்டத்துடன் சரியான தொழில் நுட்பத்துடன் இருக்க வேண்டும்; அப்போது தான், இயந்திரம் தனது வேலையை சரியாக செய்யும். ஆனால், பாதாள சாக்கடை கட்டமைப்பே தவறு என்கிற போது, இயந்திர தொழில்நுட்பம் எந்தளவுக்கு உதவும் என்பது கேள்விக்குறியே. இதுதான், திருப்பூருக்கான நிலைமை.இவ்வாறு, அவர் கூறினார்.''பாதாளச் சாக்கடைக்குள் கழிவுநீர் மட்டுமே வழிந்தோடி செல்ல வேண்டும். ஆனால், திருப்பூர் நகரப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையில் குப்பை, கழிவு, பாலிதீன் கழிவு உள்ளிட்டவை கொட்டப்படுகின்றன; கழிவுநீர், மழைநீருடன் அவையும் அடித்து வரப்பட்டு, அடைப்பு ஏற்படுத்துகின்றன. இதனால், சாலையெங்கும் வெள்ளம், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை திடக்கழிவு மேலாண்மை திட்டம் திடமாக இருக்க வேண்டும். மாநகராட்சியில் டன் கணக்கில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு முதலில் இடமில்லை; குப்பைகளை கொட்ட, பாறைக்குழிகளை தேடி அலைகிறது மாநகராட்சி நிர்வாகம். எனவே, குப்பைகளை தரம் பிரிப்பது, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சரிவர மேலாண்மை செய்வது மட்டுமே, நிரந்தர தீர்வாக அமையும். சாக்கடைக்குள் கழிவுநீர் மட்டுமே செல்ல வேண்டும் என்பதை மக்களிடம் விழிப்புணர்வாக கொண்டுசெல்ல வேண்டும். இதை மாநகராட்சி கண்காணிக்க வேண்டும்'' என்று கூறுகிறார், திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர் பேராசிரியர் வீரபத்மன்.