திருப்பூர்; ஆதார் 'அப்டேட்' விவகாரத்தில் உரிய தெளிவு இல்லாததால், மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.மத்திய, மாநில அரசுகளின் அதிகாரபூர்வ சான்று ஆவணமாக, ஆதார் எண் கருதப்படுகிறது. மத்திய, மாநில அரசு திட்டங்கள், வங்கிக்கடன் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. '15 ஆண்டுகளாக 'அப்டேட்' செய்யப்படாத ஆதார் அட்டையை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும்' என, அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது; ஆனால், இது உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளது.தற்போது கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், பள்ளி, கல்லுாரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் என்பது, அத்தியவாசியமானதாக மாறியிருக்கிறது. ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், புதிய போட்டோ இணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும், அந்தந்த பகுதியில் ஆதார் இ-சேவை மையங்கள், ஆதார் சேவையாற்றும் வங்கிக் கிளைகள், தபால் அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. காலை முதலே, மையங்களின் முன் மக்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.ஆனால், தினமும், அதிகபட்சம், 20 முதல், 30 பேருக்கு மட்டுமே 'ஆதார் அப்டேட்' பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆங்காங்கே நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் கூட இதே நிலை தான். உடனுக்குடன் பணி நடக்காததால், ஆதார் 'அப்டேட்' பணி மேற்கொள்ள குறைந்தது, ஒன்று அல்லது இரண்டு நாள் விடுமுறை எடுத்ததாக வேண்டியிருக்கிறது. 'இது, சாத்தியமில்லாத காரியம்' என்பதால், பலரும் ஆதார் 'அப்டேட்' செய்யாமல் உள்ளனர்.மேலும், 60, 70 வயது கடந்த முதியவர்கள், பென்ஷன்தாரர்கள் பலரும் தங்களின் ஆதார் 'அப்டேட்' செய்யாமல் உள்ளனர். இதனால், அவர்களது பென்ஷன் தடைபடுமா என்ற அச்சம் கூட அவர்களுக்கு ஏற்படுகிறது. பல்வேறு உடல் உபாதைகளால் அவதியுறும் முதியோர்களை ஆதார் மையங்களுக்கு அழைத்து வந்த, மணிக்கணக்கில் காத்திருக்க வைத்து, ஆதார் 'அப்டேட்' செய்வதென்பது, பெரும் சிரமமான காரியமாக உள்ளது என, பொது மக்கள் புலம்புகின்றனர்.
தேவை, வீடு தோறும் சேவை!
ரசுப் பள்ளிகளில், பள்ளிகளிலேயே ஆதார் 'அப்டேட்' மற்றும் புதிய ஆதார் எண் பெறும் பணி மேற்கொள்ளப்படுகிறது; இது வரவேற்க கூடியது. அதே நேரம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பள்ளிகளி் அத்தகைய பணி மேற்கொள்ளப்படுவதில்லை.பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'ஆதார் என்பது, ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு தரும் அதிகாரபூர்வ சான்று என்ற நிலையில், அதை அலைச்சல், மன உளைச்சல் இல்லாமல் பெறுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 'ஆதார் அப்டேட்' செய்ய வேண்டுமா, அதற்கு கால அவகாசம் உள்ளதா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். அதில், திருத்தம் செய்வது, பெயர், முகவரி மாற்றம், புதிய ஆதார் எண் பெறுவது உள்ளிட்ட பணிகளை சிரமமின்றி, எளிமையாக செய்து கொடுக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு. வார்டு, வாரியாக ஆதார் 'அப்டேட்' செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். வீடு தோறும், ஆதார் சேவையை மக்கள் பெற்றிருப்பதை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.