உடுமலை;'தினமலர்' முன்னாள் ஆசிரியரும், நாணயவியல் தந்தையுமான மறைந்த டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, பழங்கால நாணயங்களை ஆவணப்படுத்தியுள்ளார். அவையே, நமது வரலாற்றின் சாட்சியாக உள்ளது,' என, உடுமலையில் நடந்த வரலாற்று ஆய்வு நடுவ நுால் வெளியீட்டு விழாவில், முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி பேசினார்.திருப்பூர் மாவட்டம், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், 'கரை வழி நாடும் நாகரிகமும்' என்ற கல்வெட்டுகள் மற்றும் கனிமவளங்கள் சார்ந்த இரு நுால்கள் மற்றும் தளி எத்தலப்ப மன்னர் தொடர்பான தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர், என, மூன்று நுால்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். இதில், சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணைவேந்தர் பொன்னுச்சாமி பேசியதாவது:'தினமலர்' முன்னாள் ஆசிரியரும், சங்க கால நாணயவியலின் தந்தையுமான மறைந்த டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, பழங்கால நாணயங்களை ஏராளமாக சேகரித்து ஆவணப்படுத்திஉள்ளார்.சங்க இலக்கியங்கள் எப்படியோ, அவ்வாறு பழங்கால நாணயங்கள் வாயிலாக, வரலாற்றை நமக்கு வழங்கியுள்ளார். கொங்கு நாட்டில் குறிப்பாக, தென் கொங்கு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாணயங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார்.அமராவதி கரைவழி பகுதிகளிலுள்ள, வட பூதனம், கடத்துார், கண்ணாடிபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில், ரோமானிய நாணயங்கள் உட்பட, ஏராளமான பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. அதனை, அவர் ஆவணப்படுத்தியுள்ளார். அந்தக் நாணயங்களே, கரை வழி நாகரிகம், வரலாற்றின் சாட்சியாக உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர்(ஓய்வு) மூர்த்தீஸ்வரி பேசுகையில், 'அமராவதி கரைவழி நாகரிகம், கரைவழியில் இருக்கும் பெருவழிகள், கரை வழியில் இருக்கும் வளங்கள், பொருந்தல் நாகரிகம், கொடுமணல் நாகரிகம் ஆகியவை, இந்த கரை வழிநாட்டுக்குச் சொந்தமானது,' என்றார்.தமிழக அரசு, அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி பேசுகையில், 'மண் சார்ந்த நுால்களை உருவாக்க வேண்டும். இது போன்ற நுால்களை மக்கள் வாங்கிப்படிக்க வேண்டும். இவற்றை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்,' என்றார்.விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் ராதாகிருஷ்ணன் (உடுமலை), மகேந்திரன் (மடத்துக்குளம்), முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, விண்ட்கேர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி அந்தோணி, வரலாற்று ஆய்வு நடுவத்தின் நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, குமாரராஜா, செல்வராஜ், சிவக்குமார், நுாலாசிரியர் அருட்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.