| ADDED : ஜன 13, 2024 01:48 AM
திருப்பூர்;திருப்பூர் வடக்கு போலீசார் வசம் நீண்ட நாட்களாக கேட்பாரற்றுக் கிடந்த இரு சக்கர வாகனங்கள் நேற்று ஏலம் விடப்பட்டது.திருப்பூர் வடக்கு போலீஸ் கட்டுப்பாட்டில் பல்வேறு வழக்குகள், புகார்களின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 65 இருசக்கர வாகனங்கள், வழக்கு விசாரணை முடிந்தும், நீண்ட நாட்களாகவும், அதன் உரிமையாளர்களால் பெற்றுக் கொள்ளப்படவில்லை.இதனால், அவை சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்த ஏலம் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் முன்னிலையில் நடந்தது. மொத்தம் 65 வாகனங்களுக்கு 1,99,400 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவை 2.27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டு, ஒப்படைக்கப்பட்டது. ஏலத்தில் சலசலப்பு
இந்த வாகனங்களுக்கான ஏலம் கடந்த டிச., மாதம் அறிவிக்கப்பட்டு, கடந்த, 4ம் தேதி நடந்தது. அந்த ஏல நடவடிக்கைகள் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ரத்து செய்யப்பட்டு நேற்று மறு ஏலம் நடந்தது.இந்த ஏலத்திலும் சிலர் சிண்டிகேட் அமைத்து கலந்து கொண்டதாக வியாபாரிகள் மத்தியில் சலசலப்பு எழுந்தது.ஏலம் முடிவடையும் நேரத்தில் இது தொடர்பாக சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஏலம் நடத்திய அலுவலர்கள், தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேச வேண்டாம் எனக் கூறி, வாக்குவாதம் செய்தவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். இதனால், பரபரப்பு நிலவியது.