மக்காத கழிவுகளுடன் ஓடை: மழைநீர் செல்வதற்கு தடை
ச மீப காலமாக, ஓடைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்க, நீர்நிலைகளோ வானம் பார்த்த பூமியாக வறண்டு காணப்படுகின்றன. சாமளாபுரம் அடுத்த, அய்யன்கோவில் - - பூமலுார் செல்லும் வழியில் உள்ள நீரோடை, மக்காத குப்பைகளால் முழுமையாக மாசடைந்துள்ளது. இந்த ஓடை வழியாக செல்லும் நீர், சாமளாபுரம் பகுதியில் பிரதான நீர் ஆதாரமாக உள்ள சாமளாபுரம், பள்ள பாளையம் குளங்களை சென்றடைகிறது. இந்த குளங்களில் எண்ணற்ற நீர்வாழ் உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. ஓடை வழியாக குளத்துக்குச் செல்லும் நீரில், பிளாஸ்டிக் பாட்டில்கள், செத்த கோழிகள், இறைச்சி கழிவுகள், முட்டைகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. கழிவுகளால், நீரின் ஓட்டம் தடைபடுவதுடன், மாசடைந்த தண்ணீர் குளத்துக்குச் செல்வதால், குளங்களும் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை சந்திக்கும். குளத்தில் வாழும் எண்ணற்ற உயிரினங்களும் பாதிக்கப்படக்கூடும். கழிவுகளை ஓடைகளிலும், நீர்நிலைகளிலும் கொட்டுவதே இந்த பாதிப்புக்கு காரணம். சுற்றுவட்டார கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்களை பாதுகாக்க வேண்டும். அதற்கு, குப்பைகள், கழிவுகள் திறந்த வெளியில் வீசப்படுவதை தடுப்பதுடன், குப்பை மேலாண்மையை முறையாக கையாள வேண்டும்.