| ADDED : நவ 21, 2025 06:35 AM
திருப்பூர்: ஒரு முறை பயன்படுத்தப்படும் பாலிதீனுக்கு தடையுத்தரவை நடைமுறைப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில், மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாவட்ட அளவிலான பணிக்குழு மற்றும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.அதில், கலெக்டர் பேசியதாவது: தடை செய்யப்பட்ட, ஒரு முறை பயன்படுத்தி துாக்கி வீசப்படும் நெகிழி கழிவு பயன்பாட்டுக்குரிய தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை சுற்றுச்சூழல் பொறியாளர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாதம் ஒருமுறை உள்ளாட்சிகளில் நெகிழி கழிவு சேகரித்து, இணை எரியூட்டு முறையில் அகற்றப்பட வேண்டும். பள்ளி, கல்லுாரிகள், பல்கலை, என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். இயக்கம், இளைஞர், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை இணைத்து, வலுவான மக்கள் இயக்கம் உருவாக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து பரப்புரை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்த 'பசுமை தோழி' என்ற பணியிடம் நியமிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பாரதிராஜா, சத்தியன், பறக்கும் படை செயல் அலுவலர் லாவண்யா, ஆவின் பொது மேலாளர் சுஜாதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.