உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்கியது

 பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்கியது

திருப்பூர்: பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான, பேச்சுவார்த்தை துவங்கியது. திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தம், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது. பனியன் உற்பத்தியாளர் சங்கங்களும், தொழிற் சங்கங்களும், பேச்சுவார்த்தை நடத்தி, சம்பள உயர்வு ஒப்பந்தம் முடிவு செய்யப்படுகிறது. கடந்த 2021ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம், கடந்த செப்., மாதத்துடன் முடிந்தது. புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சு வார்த்தையை துவக்க, தொழிற் சங்கங்கள் தரப்பில், உற்பத்தியாளர் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் தரப்பில், தொழிலாளர்களுக்கு 150 சதவீதம் சம்பள உயர்வு, பஞ்சப்படி, வாடகை படி உயர்வு கேட்டு, உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கடந்த 4 ம் தேதி, உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் கூடி, சம்பள பேச்சுவார்த்தைக்கான கூட்டுக்குழு தலைவராக, ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியனை தேர்வு செய்தனர். ஆறு உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முதல்கட்ட சம்பள பேச்சுவார்த்தை, அப்பாச்சி நகரிலுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். 9 சங்கத்தின் பிரதிநிதிகள் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), ஏற்றுமதியாளர்கள் சங்கம், நிட்மா, சிம்கா, டீமா, டெக்மா ஆகிய ஆறு உற்பத்தியாளர் சங்கங்களின் பேச்சுவார்த்தை கமிட்டி பிரதிநிதிகள்; தொழிற் சங்கங்கள் தரப்பில், ஏ.ஐ.டி.யு.சி. - சி.ஐ.டி.யு. - எல்.பி.எப். - எம்.எல்.எப். - எச்.எம்.எஸ். - ஐ.என்.டி.யு.சி. - ஏ.டி.பி. - பி.எம்.எஸ். - டி.டி.எம்.எஸ். ஆகிய ஒன்பது சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசினர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தொழிற் சங்கங்கள் இணைந்து, ஒருங்கிணைந்த சம்பள ஒப்பந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என, உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் வலியுறுத்தினர். அதனடிப்படையில், வரும் டிச. 5ம் தேதி, ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய முதல் கட்ட பேச்சுவார்த்தையில், உற்பத்தியாளர் சங்கங்கள் தரப்பினர் கூறியபடி, ஒருங்கிணைந்த சம்பள ஒப்பந்த கோரிக்கை ஷரத்துக்களை தயாரிக்க, அவிநாசி ரோட்டிலுள்ள சி.ஐ.டி.யு., அலுவலகத்தில், வரும் 24ம் தேதி, ஒன்பது தொழிற்சங்கத்தினரும் கூடி பேசி, ஒருங்கிணைந்த சம்பள ஒப்பந்த கோரிக்கை பட்டியல் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்