உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிக்னல்களில் விளம்பர பலகை: போலீஸ் பதில்; மனுதாரர் அதிர்ச்சி

சிக்னல்களில் விளம்பர பலகை: போலீஸ் பதில்; மனுதாரர் அதிர்ச்சி

திருப்பூர்; திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் போக்குவரத்து சிக்னல்களில் விதிமீறி விளம்பர பலகைகள் தொங்கவிடப்பட்டிருப்பது தொடர்பாகவும், இதற்காக விளம்பர நிறுவனங்களிடமிருந்து, லட்சக்கணக்கான ரூபாய் வசூலிக்கும் மேலிடம் யார் என கேள்வி கேட்டும், தமிழ்நாடு நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன், கடந்த ஜூலை 28ல் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் மனு அளித்தார். இதற்கான விசாரணை அதிகாரியான பெருமாநல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிக்கையில், 'அவிநாசி உட்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம், சிக்னல்களில் தலைக்கு மேல் தொங்கும் விளம்பர பலகைகளை உடனடியாக அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்துகொண்டதால், மனு மீது மேல் நடவடிக்கை வேண்டாமென மனுதாரர் கேட்டுக்கொண்டதன் பேரில், விசாரணை முடித்து வைக்கப்படுகிறது,' என குறிப்பிட்டுள்ளார். மனுதாரர் சரவணனிடம் கேட்டதற்கு, ''போலீஸ் தரப்பில் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. நானும் எந்த பதிலும் அளிக்கவில்லை. மேல் நடவடிக்கை வேண்டாமென நான் கூறியதாக குறிப்பிட்டு, தன்னிச்சையாக மனுவை முடித்து வைத்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைகள், தவறான முன்னுதாரணமாகி விடும். இதுதொடர்பாக, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார். 'ஏற்கனவே விசாரணை நடத்திவிட்டோம்' பெருமாநல்லுார் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் கூறுகையில், ''விளம்பர பலகை தொடர்பாக ஏற்கனவே சரவணனை நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளோம். மீண்டும் அதே புகார் மனுவையே அளித்துள்ளார். ஏற்கனவே நடத்திய விசாரணை அடிப்படையிலேயே, தற்போது பதில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை