| ADDED : பிப் 23, 2024 12:45 AM
திருப்பூர்;'வளம்' பாலம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், நொய்யல் கரை ரோட்டில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் நொய்யல் கரையை ஒட்டி, செல்லாண்டியம்மன் துறை பகுதியில் வடிகால் கட்டுமானப் பணி நடக்கிறது. இப்பணி மந்த கதியில் நடப்பதால், வளம் பாலம், ஈஸ்வரன் கோவில் பாலம் வழியாக உள்ள ரோடுகளில் கடும் போக்குவரத்து நெருக்கடியும், வாகன நெரிசலும் காணப்படுகிறது. பாலம் அருகே கட்டுமானப் பணி நடப்பதால், ஒரு வாகனம் மட்டுமே கடந்து செல்லும் வகையில் இடம் உள்ளது. அதே சமயம் நாலாபுறங்களிலிருந்தும் வாகனங்கள் வருவதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.போக்குவரத்து போலீசார் பணியாற்றிய நிலையிலும் வாகன ஓட்டிகள் பெரும் திணறலுக்கு ஆளாகினர்.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு காணும் விதமான நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டனர்.அவ்வகையில் இப்பகுதிக்கு வாகனங்கள் வருவதை மாற்று ஏற்பாடு மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஈஸ்வரன் கோவில் பாலம் முதல் ஏற்றுமதியாளர் சங்க வெள்ளி விழா ரோடு வழியாக வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அந்த ரோட்டில், தடை ஏற்படுத்தி 'நோ என்ட்ரி' அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு வழியாக வரும் வாகனங்கள் சுற்றிக் கொண்டு வந்தாலும், வளம் பாலம் அருகே போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது சற்று குறைந்துள்ளது.