கட்டடம் இடிப்பு; தம்பதிக்கு 5 ஆண்டு சிறை
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை சேர்ந்தவர் சிவராஜ் கார்த்திகேயன், 53. இவர் காங்கயம் கரூர் ரோட்டில் உள்ள தனியார் வேபிரிட்ஜ் அருகே உள்ள சின்னசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தை கடந்த, 2007ல் ஒப்பந்தம் செய்தார். அந்த இடத்தில், தனது சொந்த பணத்தில் ஓட்டல் கட்டி நடத்தி வந்தார். இந்நிலையில், சின்னசாமி இறந்ததால், சொத்துக்கள் அவரது உறவினர் மயில்சாமி என்பவருக்கு மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஒப்பந்தத்தில் இருந்த ஓட்டல் கட்டப்பட்ட இடத்தை காலி செய்து தருமாறு மயில்சாமி தரப்பினர் சிவராஜ், கார்த்திகேயனை கேட்டனர். இதுதொடர்பாக, கடந்த, 2022ல், மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையறிந்த மயில்சாமி, மனைவி சுமதி ஆகியோர் தலைமையில் கட்டடத்தை பொக்லைன் மூலம் இடித்து, சிவராஜ் கார்த்திகேயன், ஓட்டல் வேலையாட்களை கட்டையால் தாக்கினர். இதுதொடர்பான வழக்கு காங்கயம் சப்-கோர்ட்டில் மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி, தம்பதிக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.