| ADDED : மார் 15, 2024 12:53 AM
திருப்பூர்;நிதியாண்டு நிறைவடையும் நிலையில், பெட்ரோலியப் பொருட்களை அதிகளவில் இருப்பு வைக்க வற்புறுத்துவதாக, ஆயில் நிறுவனங்கள் மீது பங்க் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அனைத்துப் பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய பெட்ரோல் பங்க்கள் செயல்படுகின்றன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் இது போன்ற பங்க்குகள் இயங்குகின்றன.இது தவிர ஒரு சில தனியார் நிறுவனங்களின் பங்க்களும் உள்ளன.இந்த சில்லரை விற்பனை பங்க்குகள் தங்களிடமுள்ள கொள்ளளவு டேங்க் மற்றும் விற்பனை அளவுக்கு ஏற்ப பெட்ரோலியப் பொருட்களை தருவித்து விற்பனை செய்கின்றன.இந்நிலையில் தற்போது நிதியாண்டு நிறைவடையும் நிலையில் ஆயில் நிறுவனங்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்கும் எண்ணத்தில் பங்க் உரிமையாளர்களை அதிகளவில் பெட்ரோலியப் பொருட்களை இருப்பு வைக்க வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.திருப்பூரை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: தற்போது கோடை வெயில் அதிகளவில் உள்ளது. வாகனங்கள், பங்க்களில் உள்ள டேங்க்குகளில் அதன் கொள்ளளவில் அதிக பட்சமாக, 80 சதவீதம் அளவு மட்டுமே பெட்ரோல், டீசல் இருப்பு வைக்க அறிவுறுத்தப்படுகிறது.ஆனால், சில ஆயில் நிறுவனங்களின் விற்பனை பிரிவினர் நிதியாண்டு கணக்கில் அதிகளவில் விற்பனை இலக்கை காட்ட வேண்டும் என்பதற்காக டேங்க் கொள்ளளவு மட்டுமின்றி, பங்க்குகளில் டேங்கர் லாரிகளில் கூட பெட்ரோல், டீசலை இருப்பு வைக்கும் அளவு கொள்முதல் செய்ய வற்புறுத்துகின்றனர்.டேங்க்குகளில் உரிய பாதுகாப்பு உள்ளதால் அதில் நிரப்பி வைப்பதில் சிக்கல் இல்லை.அதேசமயம் இந்த கடும் வெப்பம் நிலவும் நாட்களில் லாரிகளில் இவற்றை இருப்பு வைப்பது என்பது பாதுகாப்பாக இருக்காது.ஆயில் நிறுவன விற்பனை பிரிவினர் தங்கள் 'இன்சன்டிவ்' தொகையை எண்ணி இது போல் ஆபத்தான நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.பல பங்க்குகளில் டேங்கர் லாரிகள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுடன் நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல.