உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 10வது ஆண்டாக மூடு விழா காணும் பஸ் ஸ்டாண்ட் :மக்கள் வரிப்பணம் ரூ.1.78 கோடி வீணாகும் அவலம்

10வது ஆண்டாக மூடு விழா காணும் பஸ் ஸ்டாண்ட் :மக்கள் வரிப்பணம் ரூ.1.78 கோடி வீணாகும் அவலம்

பல்லடம்;பல்லடம் அருகே, பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பஸ் ஸ்டாண்ட், தொடர்ந்து, 10வது ஆண்டாக மூடு விழா காண்கிறது.பல்லடம் அருகே காரணம்பேட்டையில், 1.78 கோடி ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, கடந்த, 2015 முதல் பயன்பாடின்றி கிடக்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டுள்ளதால், பஸ்களும் வருவதில்லை; பொதுமக்களும் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால், மூடு விழா காணப்பட்டுள்ள இந்த பஸ் ஸ்டாண்ட், தொடர்ந்து, 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வணிக பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கடைகள், டூவீலர் ஸ்டாண்டு உள்ளிட்டவையும் பயன்பாடின்றி உள்ளன. பஸ் ஸ்டாண்டுக்குள் அமைக்கப்பட்டுள்ள, ஆர்.ஓ., வாட்டர் இயந்திரம் சேதமடைந்துள்ளது. இருக்கைகள் துருப்பிடித்து வருகின்றன. அவ்வப்போது சமூக விரோத செயல்களும் நடந்து வருகின்றன.பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால், இதனை மாற்று பயன்பாட்டிற்கு மட்டுமே கொண்டுவர வேண்டும். மாட்டுச்சந்தை அமைக்கலாம் என விவசாயிகளும், ஜவுளி சந்தை அமைக்கலாம் என விசைத்தறி உரிமையாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில், கடந்தாண்டு செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்தார். இருப்பினும், பஸ் ஸ்டாண்டை மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு, தொடர்ந்து பத்து ஆண்டாக மூடி கிடக்கும் காரணம்பேட்டை பஸ் ஸ்டாண்டினால், பொது மக்களின் வரிப்பணம், 1.78 கோடி ரூபாய் வீணாகி போனது.காலப்போக்கில் கட்டடமும் காணாமல் போகும் வாய்ப்பு உள்ளது என்பதால், பயன்பாட்டை பஸ் ஸ்டாண்டை மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ