| ADDED : ஜன 09, 2024 12:43 AM
திருப்பூர்;கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் பொதுநல சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் வீரமுத்து தலைமையில், கலெக்டரிடம் அளித்த மனு:அரசு கேபிள் வினியோகஸ்தரிடம், சிக்னல் தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் பயனில்லை. பணம் பெற்றுக்கொண்டு, சில ஆபரேட்டர்களுக்கு மட்டும் சிக்னல் கொடுக்கிறார்.பணம் கொடுக்காதபட்சத்தில், வேறு நபர்களுக்கு 'சிக்னல்' கொடுத்துவிடுவதாக கூறி மிரட்டுகிறார். விதிமீறி, தனியாருக்கு சொந்தமான இடத்தில், அரசு கண்ட்ரோல் ரூம் அமைத்துள்ளனர்.அரசு கேபிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருந்தாலும்கூட சூர்யா, ஆளுங்கட்சி பெயரை பயன்படுத்தி மிரட்டுகிறார். அரசு கேபிள் டிவி நிறுவன வளர்ச்சிக்கான எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல், சட்ட விரோதமாக செயல்படும் வினியோகஸ்தர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.அரசு கேபிள் ஆபரேட்டர்கள் சங்க மாநில தலைவர் சிவராஜ் கூறியதாவது:அரசு கேபிள் இணைப்பில் எச்.டி., பாக்ஸ் இல்லாததை காரணமாக கூறி, திருப்பூரில், அரசு கேபிள் ஆபரேட்டர் பலர், தனியார் கேபிள் ஆபரேட்டர்களாக மாறிவிட்டனர். தற்போது, தாங்களும் அரசு கேபிள் சேவை வழங்காமல், புதிய ஆபரேட்டர்களையும் இணையவிடாமல் தடுக்கின்றனர்.அரசு கேபிள் சேவையை மக்களுக்கு வழங்கும் நோக்கில் செயல்படும் திருப்பூர் வினியோகஸ்தருக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர். ஆபரேட்டர்களிடம், அரசு கேபிள் வினியோகஸ்தர் பணம் பெறுகிறார் என கூறுவது, முற்றிலும் தவறானது.இவ்வாறு, அவர் கூறினார்.