திருப்பூர்:'அதிக எடை மற்றும் அதிகப்படியான கொழுப்பு உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை தருகிறது' என்கிறது, உலக சுகாதார நிறுவனம். உடல் பருமன் பிரச்னை பொது சுகாதார பிரச்னையாக மாறிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.உடல் பருமன் அதிகரிப்பதால், கடுமையான உடல்நலப் பிரச்சனை ஏற்படும் சூழல் தானாகவே உருவாகிறது. பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது; உடல் பருமன் மன அழுத்தத்துக்கு முதன்மையான காரணமாகி விடுகிறது. சரியான உணவு பழக்கம் இல்லாதது மற்றும் துாக்கமின்மை உடல் பருமன் அதிகரிக்க வழிவகுக்கிறது.உடல் பருமன் அதிகமாக இருப்பவருக்கு நீரிழிவு, மூட்டுவலி, இதயநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வர வாய்ப்பு உருவாகி விடுகிறது. அதிகப்படியான உடல் கொழுப்பால், புற்றுநோய்கள் வரவும் வாய்ப்புள்ளது.அன்றாடம் நம் பணியின் போது எரிக்க கூடியதை விட, அதிகளவில் கலோரிகளை உட்கொள்ளும்போது, கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளில் இருந்து சேருகிறது; பருமனாக மாறுகிறது. கூடுதல் கலோரிகளை உடல், கொழுப்பாக சேமித்து வைக்கிறது.உடல் பருமனை குறைக்க ஆரோக்கியமான, சீரான உணவு முறைக்கு மாற வேண்டும்.தினமும், 45 நிமிட உடற்பயிற்சி கட்டாயம், சரியான எடை கண்காணிப்பு உடல் பருமனை தடுப்பதற்கான வழிகள். அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.தானிய உணவு, பருப்பு வகைகளை அதிகம் உட்கொள்ளலாம். மது அருந்த கூடாது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பொறித்த உணவு, சிவப்பு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பொது சுகாதாரத்துறை பேராசிரியர் செண்பகஸ்ரீ கூறியதாவது:ஒருவரின் ஆரோக்கியமின்மைக்கு, உடல்பருமன் பெரும்பங்கு வகிக்கிறது. அதிகமான உடல் பருமன் உள்ளவர்கள் நோய் வாய்ப்படும் போது, அதிலிருந்து மீண்டு குணமாக நாட்கள் பிடிக்கும்.சிலருக்கு ஆயுட்காலமே குறைந்து விடும் வாய்ப்பு கூட உண்டு; 35 முதல், 45 வயதை கடக்கும் போது, முழு உடல் பரிசோதனை அவசியம்.சிலருக்கு அகசுரப்பி கோளாறு காரணமாகவும், உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் பருமன் அதிகமாக இருந்தால், சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் நோய், ஈறல் தொடர்புடைய பிரச்னை, சில வகை புற்றுநோய், எலும்பு, தோல் வியாதி வர வாய்ப்புள்ளது.எனவே, தினமும், ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது. உடல் பருமன் அதிகமாக இருந்தால், தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளலாம். உடல் எடைக்கு ஏற்ப, உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.-