உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வசதியே செய்யாமல் வசூலிலேயே அறநிலையத்துறை குறி; அவிநாசி கோவில் பக்தர்கள் பரிதவிப்பு

வசதியே செய்யாமல் வசூலிலேயே அறநிலையத்துறை குறி; அவிநாசி கோவில் பக்தர்கள் பரிதவிப்பு

அவிநாசி : 'காசியில் வாசி அவிநாசி' என்று போற்றப்படும் அவிநாசியில், கடந்த 2ம் தேதி மஹா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிேஷக பூஜை நடைபெறுகிறது. இதில் முதல் இரண்டு நாட்கள் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், கோவில் வளாகத்தில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் - மங்கலம் சாலை வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.கடும் வெயிலில், கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகினர். அறநிலையத்துறை சார்பில் கோவில் வளாகத்திலும், உள் பிரகாரத்திலும் குடிநீர் வசதி கூட ஏற்படுத்தாமல் இருந்தனர். பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததால், இரண்டு நாளாக யாகசாலை வளாகத்தில் பக்தர்கள் வரிசையாக நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மண்டல பூஜை நடந்து வரும் நிலையில், தினமும், 3 ஆயிரம் பக்தர்கள் வரை கோவிலுக்கு வந்து கொண்டுள்ள நிலையில், நேற்று முதல், சிறப்பு தரிசன கட்டணம், 50 ரூபாய் என போர்டு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.கோவில் வளாகத்திலேயே 'பார்க்கிங்'அதிலும், பக்தர்கள் நீண்ட வரிசையில் வெயிலில் காத்து நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 'பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால், மண்டல பூஜை நடைபெறும் 48 நாட்களுக்கு கோவில் வளாகத்தில், வாகனங்கள் உள்ளே அனுமதிக்க வேண்டாம்,' என அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். ஆனால், கோவில் வளாகம் முன் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால், பக்தர்கள் நிற்க கூட இடமின்றி வெயிலில் நின்று அவதிப்படுகின்றனர்.------------------------------------அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வெளி வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் வெயிலில் காயும் அவலம் தொடர்கிறது.

ரூ.50 டிக்கெட் விற்பனை ஜரூர்

பக்தர்கள் சிலர் கூறியதாவது:கும்பாபிேஷக நாளன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் உரிய வசதி செய்ய முடியாமல் போயிருக்கலாம். ஆனால், அதன் பின்னரும் குடிநீர் வசதி, வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு நிழல் வசதி எதுவுமே செய்யவில்லை.ஆனால், சிறப்பு தரிசன வழி, 50 ரூபாய் டிக்கெட்டை கூவிக்கூவி விற்கின்றனர். வசூல் வேட்டையில் குறியாக உள்ள அவிநாசி கோவில் நிர்வாகம், பக்தர்களுக்கு தேவையான வசதிளை செய்து தருவதில் அக்கறை காட்டுவதில்லை. இது குறித்து இணை ஆணையர் விசாரணை செய்து, வசதிகளை செய்து தர முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் கூறுகையில், ''இன்று (நேற்று) முதல் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் நிழலில் நிற்பதற்காக உடனடியாக முன்பகுதியில் ஷெட் அமைக்கப்படும். வாகனங்களை இன்று (நேற்று) முதலே மாற்று இடத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை