உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தனித்திறன் வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி குழந்தைகள்

 தனித்திறன் வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி குழந்தைகள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் வரவேற்றார். பயனாளிகள் ஏழு பேருக்கு, தையல் மெஷின், செயற்கை கால், வீல் சேர் மொத்தம், 99 ஆயிரத்து 160 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஓவிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் 27 பேர் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர் 36 பேருக்கு, கலெக்டர் மனிஷ் நாரணவரே பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கலெக்டர் பேசியதாவது: தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்துவகை சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும், ஓரிட சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், 26 ஓரிட சேவை மையங்கள் அமைக்க பணிகள் நடந்து வருகின்றன. வட்டார அளவில் அமையும் இம்மையங்களில், சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு பிசியோதெரபி, பேச்சு பயிற்சி உள்பட அனைத்துவகையான சேவைகளும், மிக அருகாமையில், அனைத்து நாட்களும் கிடைக்கச் செய்யப்படும். ஓரிட சேவை மையம் அமையும்போது, தங்கள் பகுதிகளிலேயே, மிக சுலபமாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அடையாள அட்டை பெறமுடியும். இவ்வாறு, அவர் பேசினார். அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் மனோன்மணி பேசினார். பாரதி வித்யாஸ்ரம், சாய்கிருபா சிறப்பு பள்ளி, அகம், அண்ணல், திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி, பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம், கவுமாரம் பிரசாந்தி அகாடமி, அன்னை தெரசா பள்ளி மாணவ, மாணவியர், அவரவர் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களோடு, பக்தி பாடல்கள், திரைப்பட பாடல்களுக்கு, நடனம் ஆடியும், பரதநாட்டியம் ஆடியும் அசத்தினர். சாய்கிருபா சிறப்பு பள்ளி மாணவர் தரணிநாதன், புயல் வேகத்தில் இரண்டு சிலம்பம் சுற்றியும், ஹரி ராஜன், கார்த்திகேயன் ஆகியோர், கராத்தே செய்து காண்பித்தும் ஈர்த்தனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் அமைப்பினர், சக் ஷம் அமைப்பு ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. சக் ஷம் அமைப்பு மாவட்ட தலைவர் ரத்தினசாமி, சாய்கிருபா பள்ளி நிறுவனர் கவின் திருமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றரன். ----- 4 படங்கள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. இதில், மாணவர்கள், தயார் செய்த அலங்காரப் பொருட்கள் கண்காட்சி இடம்பெற்றது. ஆசிரியை சைகை காட்ட, நடனம் ஆடி அசத்திய மாணவியர் . படைப்புகள் சிறப்பு மாற்றுத்திறனாளிகள் தின விழாவின் ஒருபகுதியாக, திருப்பூரிலுள்ள சிறப்பு பள்ளிகள் சார்பில், ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர் கைவண்ணத்தில், அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட வளையல்கள், கலை நயம் மிக்க கைவினை பொருட்கள், மிதியடி உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கடலை உருண்டை, பானி பூரி, டீ - காபி போன்ற உணவு பதார்த்தங்களும் விற்பனை செய்யப்பட்டன. அரசு அலுவலர்கள், பொதுமக்கள், ஸ்டால்களை பார்வையிட்டு, தேவையான பொருட்களை வாங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி