உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விபத்து பகுதியாக மாறிய நகர ரோடுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விபத்து பகுதியாக மாறிய நகர ரோடுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

உடுமலை:உடுமலை நகரப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கும் மண் குவியலை, அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை கல்பனா ரோட்டில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் இந்த ரோட்டில் உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாய், ஒவ்வொரு பகுதியாக துார்வாரப்பட்டு, வடிகால் கட்டப்படுகிறது.நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், இப்பணிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கிறது. கால்வாய் துார்வாரப்படும்போது வரும் மண் கழிவுகளை, குடியிருப்பு இல்லாத பகுதிகளிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் கொட்ட வேண்டும்.ஆனால், நகராட்சி நிர்வாகம், கல்பனா ரோட்டில் எடுக்கப்படும் மண் கழிவுகளை, ராஜேந்திரா ரோட்டில் அரசுப்பள்ளி எதிர்புறம் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால் தற்போது ராஜேந்திரா ரோடு மண் குவியலாக மாறிவிட்டது.பள்ளி மாணவர்கள் சென்று வருவதற்கு மட்டுமின்றி, பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாத வகையிலும் கழிவு குவிக்கப்பட்டுள்ளது.வடிகால் பணிகளை முதலில் துவங்கியபோது, மண் கழிவுகளை அப்பகுதியில் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக தொடர்ந்து அவ்வாறு செயல்படுகிறது.கால்வாயிலிருந்து தோண்டபட்ட கற்களும் இந்த குவியலில் உள்ளது. மண் குவியல் ரோட்டின் பாதி வரை தற்போது வந்துவிட்டது.குவியலில் உள்ள கற்கள் ரோட்டில் சிதறிக்கிடக்கிறது. இந்நிலையில் இவ்வாறு பெரிய கற்கள் ரோட்டில் கிடப்பதை வாகன ஓட்டுநர்கள் அடையாளம் காண முடியாமல் வரும்போது, விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பகுதியாகவும் தற்போது மாறிவிட்டது.பொதுமக்கள் கூறியதாவது:நகராட்சி நிர்வாகம் தொலைதுாரம் சென்று கழிவுகளை அப்புறப்படுத்தாமல், இவ்வாறு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கொட்டிவிட்டு செல்கிறது. பள்ளிச்சூழல் எனவும் சிந்திக்காமல் தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.நாள்தோறும் அப்பகுதி வழியாக, ஆயிரகணக்கானவர்கள் கடந்து செல்கின்றனர். கழிவுகளிலிருந்து பறக்கும் துாசு, வாகனம் ஓட்டுபவர்களை பாதிக்கிறது. வாகனங்கள் வந்து திரும்பும் வளைவில் கழிவுகளிலிருந்து கற்கள் சிதறிக்கிடக்கின்றன.வழக்கமாக அவ்வழியாக செல்வோர், முன்னெச்சரிக்கையுடன் செல்ல முடியும். ஆனால் தெரியாதவர்கள் கடந்துசெல்லும்போதும், அதிலும் வேகமாக வரும்போது கட்டாயம் விபத்து ஏற்படும். உடனடியாக மண் கழிவை அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை