உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறையும் தீர்வதில்லை: பதிலும் வருவதில்லை; குப்பைக்கு செல்கிறதா மனுக்கள்?

குறையும் தீர்வதில்லை: பதிலும் வருவதில்லை; குப்பைக்கு செல்கிறதா மனுக்கள்?

திருப்பூர்: குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மனுக்களை குப்பை தொட்டியில் போட்டு, சமூக ஆர்வலர், நுாதன முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள்கிழமை, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும், பொதுமக்களிடமிருந்து 300 முதல் 500 மனுக்கள் வரை பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதற்காக துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மக்களின் பெரும்பாலான மனுக்கள் மீது துறை சார் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை; புகார்தாரருக்கு உரிய காலத்தில் சரியான பதிலும் அளிப்பதில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, நேற்றைய குறைகேட்பு கூட்டத்துக்கு கையில் குப்பைத்தொட்டியை எடுத்து வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் தான் அளித்த, இதுவரை தீர்வு காணப்படாத மனுக்களை எடுத்து, குப்பை தொட்டியில் போட்டு, நுாதன முறையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது குறித்து, அண்ணா துரை கூறியதாவது: துறை சார்ந்த அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, தங்கள் பிரச்னைகளை தீர்த்துவைப்பர் என்கிற நம்பிக்கையிலேயே, கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். மனுக்களை பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள், 30 நாட்கள் கடந்தும் சரியாக பதிலளிப்பதில்லை; குறைகளையும் தீர்த்துவைப்பதில்லை. மக்களாகிய நாங்கள் அளிக்கும் மனுக்கள், எங்கே செல்கிறது, அவை குப்பையில் வீசப்படுகின்றனவா. துறை அதிகாரிகளிடம், இது தொடர்பாக கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். மக்களின் மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்து, பதிலளிக்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை