உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொடைக்கு இலக்கணமாக மாநாட்டு அரங்கம்!

கொடைக்கு இலக்கணமாக மாநாட்டு அரங்கம்!

திருப்பூர் குமரன் ரோட்டில், டவுன்ஹால் வளாகம் என்றழைக்கப்பட்ட இடத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிமிர்ந்து ஜொலிக்கிறது மாநாட்டு அரங்கம். மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இந்த இடமும் வளாகமும் தற்போது உள்ளது.இந்த இடமும் இங்கு அமைந்திருந்த முந்தைய டவுன்ஹால் வளாகமும் அமைந்த வரலாறு சுவாரசியமானது.

கொடை வள்ளல்கள்

திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் சிவதாசன் பகிர்ந்த தகவல்கள்: திருப்பூர் கணபதிபாளையத்தில் நெசவு தொழில் செய்யும் தேவாங்க செட்டியார் சமூகத்தினர் அதிகளவில் இருந்தனர். அவர்களின் முன்னோடி சொக்கப்ப செட்டியார். அவரது வாரிசுகள் குள்ளி செட்டியார், மூக்கஞ்செட்டியார் மற்றும் ரங்கசாமி செட்டியார். ரங்கசாமி செட்டியார் குடும்பம், சிக்கண்ண செட்டியார் குடும்பம் கூட்டாக தொழில் நடத்தினர். பின்னர் பிரிந்து ரங்கசாமி செட்டியார் கர்நாடகா, கேரளா எனவும், சிக்கண்ண செட்டியார் திருப்பூர் மற்றும் இலங்கையிலும் வர்த்தகம் செய்தனர்.தொழிலில் கிடைத்த லாபத்தில் சிக்கண்ண செட்டியார் குடும்பம் தனலட்சுமி மில்லையும், ரங்கசாமி செட்டியார் குடும்பம் எஸ்.ஆர்.சி., (ஸ்ரீ ராமலிங்க சூடாம்பிகா) மில்லையும் துவங்கினர். இரு குடும்பத்தினரும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இடங்களை வழங்கினர். கோவில்கள் கட்டினர். அவர்கள் சிறப்பை போற்றும் விதமாக குள்ளி செட்டியார் வீதி, சிக்கண்ணா ெசட்டியார் வீதி உள்ளிட்ட பெயர்கள் வைக்கப்பட்டன. கணபதிபாளையம் ஊரின் பெருமையும், திருப்பூர் நகரின் வளர்ச்சிக்கு வள்ளல் குணத்துடன் உதவிய அக்குடும்பத்தின் நினைவாகவும், தேவாங்க சமூகம் சார்பில் ரங்கசாமி செட்டியார் சிலையை வடிவமைத்துள்ளோம். இவ்வாறு, சிவதாசன் கூறினார்.

பிரபலங்கள் பேசிய டவுன்ஹால்

ரங்கசாமி செட்டியார் குடும்பத்தின் வாரிசு தற்போது திருப்பூரில் வசித்து வரும் சுதர்சன் கூறியதாவது: எங்கள் பாட்டனார் சவுண்டப்ப செட்டியார் மற்றும் சொக்கலிங்கம் செட்டியார் ஆகியோர் இணைந்து தற்போதுள்ள இந்த வளாகத்தை அப்போதைய ஆங்கிலேய அரசிடமிருந்து பெற்று, அந்த இடத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக இந்த வளாகத்தை அமைக்கவும் நிதி வழங்கினர். எனது தாத்தா சொக்கலிங்கம் செட்டியாரின் தந்தை ரங்கசாமி செட்டியார் பெயர் அந்த வளாகத்துக்கு சூட்டப்பட்டது.அந்தக் காலத்தில் ரேடியோ மைதானமாக இருந்த இந்த இடத்தை அவர்கள் வாங்கினர். பின் 1946ம் ஆண்டு, ஜூன் 26ம் தேதி டவுன்ஹால் அரங்கம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கோவை ஜில்லா கலெக்டர் மூர், சேர்மன் கே.என்.பழனிசாமி கவுண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நாடு சுதந்திரம் பெற்ற பின், 1955ம் ஆண்டு டிச., 15ம் தேதி, அப்பாதைய தமிழக முதல்வர் காமராஜர் முன்னிலையில் டவுன்ஹால் அரங்கம் திறப்பு விழா கண்டது. அமைச்சர்கள் பரமேஸ்வரன், பக்தவத்சலம், கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.இந்த அரங்கில் சர்வோதய வாரம்; கதர் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வந்தது. அந்த காலத்தில் பிரசித்தி பெற்ற மேடை நாடகங்கள், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் என திருப்பூரின் பெரும் முக்கிய நிகழ்வுகள் இங்கு நடைபெற்றது. ஏராளமான பிரபல பேச்சாளர்கள் இந்த அரங்கில் பேசியுள்ளனர். இந்த வளாகத்துக்கு ரங்கசாமி செட்டியார் பெயர் தொடரும் வகையில் அனுமதி அளித்த முதல்வர் ஸ்டாலின், முயற்சி மேற்கொண்ட மேயர் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் எங்கள் குடும்பம் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை