உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, 16 விவசாயிகள், 99 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இ-நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 6 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ.180.61 முதல், ரூ.210.50 வரையும், இரண்டாம் தரம், ரூ.85.76 முதல், ரூ. 165.72 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொப்பரை கிலோவுக்கு, 15 முதல், 20 ரூபாய் வரை விலை குறைந்ததால், விவசாயிகள் பாதித்துள்ளனர். மழை காலம் துவங்கியுள்ளதால், கொப்பரை உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, தரம் குறைந்து விலை குறைந்துள்ளது; வரும் காலங்களில் விலை உயரும் வாய்ப்புள்ளது. உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடக்கும் இ-நாம் திட்ட ஏலத்தில், கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தனர்.