திருப்பூர்: இறக்குமதி சரக்கு எடுத்து வரும் கன்டெய்னர்களில், முறைகேடாக ஏற்றுமதி சரக்கை ஏற்றி அனுப்புவதால், சரக்கின் தன்மை மாறுவதுடன், சுமை துாக்கும் தொழிலாளரின் உடல் நலமும் பாதிக்கப்படுவதாக, திருப்பூரைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருப்பூரில் இயங்கும், 700க்கும் அதிகமான கன்டெய்னர் லாரிகள், ஏற்றுமதிக்கான பின்னலாடை பண்டல்களை, துறைமுகத்தில் உள்ள சரக்கு முனையத்துக்கு எடுத்துச்செல்கின்றன. அத்துடன், திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளை, நாடு முழுவதும் உள்ள மொத்த விற்பனையாளருக்கு கொண்டு சேர்க்கும் சேவையை செய்து வருகின்றன. டோல்கேட் கட்டண உயர்வு, வணிகவரி அதிகாரிகளின் மேலாய்வு என, பல்வேறு சவால்களையும் கடந்து, இப்பணி தொடர்கிறது. துறைமுக சரக்கு முனையங்களில் 'கறார்' மாமூல் வசூல் மூலமாகவும் இத்தொழிலுக்கு சவால்கள் உருவாகின்றன. துறைமுகங்களில் இயங்கும் சில கன்டெய்னர் லாரிகள், முறைகேடாக சரக்கு ஏற்றிச்செல்வது, ஆபத்தாகவும் மாறி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனம் மற்றும் பலவகை மூலப்பொருட்கள், நிறுவன கழிவுப்பொருட்கள், கோவை மாவட்டம் வரை எடுத்துவரப்படுகின்றன. இறக்குமதி சரக்கை ஏற்றி வரும் கன்டெய்னர்கள், சரக்கை இறக்கிவிட்டு, நேரடியாக துறைமுகம் சென்று, கன்டெய்னரை சுத்தம் செய்ய, 'ஸ்டீம் வாஷ்' செய்ய வேண்டும்; இடையே எவ்வித சரக்கையும் ஏற்றி செல்லக்கூடாது என்ற விதிமுறைகள் மதிக்கப்படுவதில்லை. துறைமுகத்தில் இருந்து இறக்குமதி சரக்கை ஏற்றி வரும் லாரிகள், அவற்றை ஒப்படைத்த பிறகு, வருவாய் ஈட்டும் வகையில், ஏதாவது ஏற்றுமதி சரக்கை ஏற்றி செல்லவும் முற்படுகின்றன. இதன் மூலம், ஏற்றுமதி சரக்கின் தரமும் குறைய வாய்ப்புள்ளது. 'ஸ்டீம் வாஷ்' செய்யப்படாத கன்டெய்னரில் சரக்கை கையாளும், சுமை துாக்கும் தொழிலாளியின் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. எனவே, இவ்வாறு யாரும் அனுமதிக்க வேண்டாம். இவ்வாறு அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ----- பாக்ஸ் - 1 கடும் நடவடிக்கை தேவை இறக்குமதி சரக்கை எடுத்து வரும் துறைமுக பகுதி கன்டெய்னர் லாரிகள், காலியாகத்தான் திரும்ப வேண்டும்; 'ஸ்டீம் வாஷ்' செய்து, சோதனையிட்ட பிறகே, மீண்டும் பொருட்கள் ஏற்ற கன்டெய்னர் அனுமதிக்கப்படும். ஆனால், ஈரோடு, கரூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு வரும் கன்டெய்னர் லாரிகள், ஏற்றுமதி சரக்கை ஏற்றி செல்கின்றன. இதனால், திருப்பூர் கன்டெய்னர் லாரிகளின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. ஏற்றுமதி சரக்கின் தரமும் பாதிக்கப்படும். ரசாயன.பொருட்கள் எடுத்து வரும் கன்டெய்னர்களை சுத்தம் செய்யாமல், பொருட்களை ஏற்றி சென்றால், சுமைப்பணியாளரின் உடல்நலனும் பாதிக்கும். இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, மாசுக்கட்டுப்பாடு வாரியமும், சுங்கத்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரத்தினசாமி, தலைவர், திருப்பூர் எக்ஸ்போர்ட் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் சங்கம். ------------------ பாக்ஸ் - 2 விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் இறக்குமதி சரக்கு ஏற்றி வரும் லாரிகளில், திருப்பூரில் இருந்து யாரும், ஏற்றுமதிக்கான சரக்கை ஏற்றி அனுப்புவதில்லை. வெளிமாவட்டங்களில் அத்தகைய தவறு நடக்கலாம். இதனால், சுமை பணியாளரின் உடல்நலம் பாதிக்கும். முறைகேடாக சரக்கை அனுப்பும் போது, ஏதாவது விபரீத விபத்து ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டையும், காப்பீட்டையும் கூட பெற முடியாது என, அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். அத்தகைய தவறு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடப்பதில்லை. - நிர்வாகிகள், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம். --- பாக்ஸ் - 3 முன்னெச்சரிக்கை அவசியம் இறக்குமதி சரக்கு எடுத்து வரும் கன்டெய்னர்களில், ஆபத்தான காஸ் மற்றும் வாயுக்கள் நிறைந்திருக்க வாய்ப்புள்ளது. அறியாத, சுமைப்பணி தொழிலாளர்கள் கன்டெய்னரில் பொருட்களை கையாளும் போது, உடல்நலம் பாதிக்கிறது. தோல் வியாதிகள், மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறுகின்றனர். திருப்பூரில் அதுபோன்ற புகார் வந்ததில்லை. இருப்பினும், சுமைப்பணி தொழிலாளர் சங்கம் வாயிலாக, போதிய முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். - சேகர், மாவட்ட செயலாளர், ஏ.ஐ.டி.யு.சி.