திருப்பூர்:ஹனுமந் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.நேற்று ஹனுமந் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அனைத்துப் பகுதியிலும் உள்ள அனுமன் கோவில்கள், சன்னதிகளில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது. அவ்வகையில் திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ஹனுமன் கோவில்களில் நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இவற்றில் திரளானோர் கலந்து ஹனுமனை வழிபட்டனர்.திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் சன்னதியில், மூலவருக்கு 10,001 வடை மாலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. சபாபதிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில், மூலவர் சீதா ராமருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். வீரராகவ பெருமாள் கோவில், அனுமன் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்து, ஆஞ்சநேயருக்கு பூஜை நடந்தது.சாமளாபுரம் கரி வரதராஜ பெருமாள் கோவில், கள்ளப்பாளையம் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் ஆகியவற்றில் உள்ள ஹனுமன் சன்னதிகளில் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது.இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, முட்டியங்கிணறு பகுதியில் உள்ள பால ஆஞ்சநேயர் கோவிலில் ஹனுமந் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 13 வகை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. வடை மாலையுடன் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 1,008 வடைமாலை
சேவூர், வடக்கு வீதியில் உள்ள தெப்பக்குளத்து ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அதிகாலை பஞ்சாமிர்தம், பால், நெய், தயிர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட 12 வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தன. வெண்ணெய் காப்பு சாத்தப்பட்டு மகா அலங்காரத்தில் தீபாராதனைகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு 1008 வடை மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சேவூர் கோட்டை அனுமந்தராயர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனைகளும் நடந்தன.