கிராம இணைப்பு ரோட்டில் குறுகலான பாலத்தால் சிரமம்
உடுமலை; கிராம இணைப்பு ரோட்டிலுள்ள, குறுகலான கால்வாய் பாலத்தால், பல கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடுமலை நகரில் இருந்து ஜீவா நகர் வழியாக, கண்ணநாயக்கனுார், மலையாண்டிப்பட்டணம் செல்லும் கிராம இணைப்பு ரோட்டை, பல கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில், குடியிருப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ரோட்டில் ஜீவா நகர் அருகே, பி.ஏ.பி., உடுமலை கால்வாய் குறுக்கிடுகிறது. கால்வாய் மீது பல ஆண்டுகளுக்கு முன் குறுகலான பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தில், கனரக வாகனங்கள் மற்றும் விவசாய விளைபொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் பாலத்தை விரிவுபடுத்தி கட்ட வேண்டும் என, பல கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.