பாழடைந்த பக்தர்கள் விடுதி: அய்யன் கோவிலில் அவலம்
பல்லடம்:பல்லடம் அடுத்த, அய்யம்பாளையம் கிராமத்தில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. சர்ப்ப தோஷம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலில் வழிபட்டு, பரிகார பூஜைகள் செய்வது வழக்கம். அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். சுற்றுவட்டார கிராம மக்களுக்கு, இக்கோவில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில், பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட தங்கும் விடுதி கட்டடம், பாழடைந்து கிடக்கிறது. கடந்த, 2004ம் ஆண்டு, 7 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தங்கும் விடுதி கட்டடத்தை, அப்போதைய முதல்வர் ஜெ., திறந்து வைத்தார். அதன் பிறகு, இக்கட்டடம் பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இக்கட்டடத்துக்குள் பெயின்ட் டப்பாக்கள், பழைய இரும்பு மற்றும் மர சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடக்கின்றன. தங்கும்விடுதிக்கு பயன்படாவிட்டால், மாற்றுப் பயன்பாட்டுக்காவது இதை பயன்படுத்த வேண்டும். ஆனால், 20 ஆண்டு காலமாக, கட்டடத்தை பயன்படுத்தாமல், 7 லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலில் உள்ள தங்கும் விடுதி கட்டடத்தை, பயன்பாட்டுக்கு கொண்டுவர அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.