உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடங்கள் காலி :நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்

அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடங்கள் காலி :நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 38 டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கை களில் சுணக்கம் ஏற்படுகிறது. திருப்பூர் மாவட்ட மருத்துவத்துறை கட்டுப்பாட்டில் உடுமலை, காங்கயம், தாராபுரம், அவிநாசி, பல்லடம், ஜல்லிப் பட்டி, கரடிவாவி ஆகிய அரசு மருத்துவ மனைகளும், மாவட்ட தலைமை மருத்துவமனையும் செயல்படுகிறது.நோயாளிகள் உயிர்காக்க, தக்க சமயத்தில் உரிய சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டியது அவசியம். மாவட்டத்தில் உள்ள பத்து லட்சம் மேற்பட்ட மக்கள் தொகைக்கு 130 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 92 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். மொத்தம் 38 காலி பணியிடங்களில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் 15 மேற்பட்ட டாக்டர்கள் வேறு மாவட்டத்தில் இருந்து திருப்பூருக்கு மாற்றப்பட்டனர். ஆனால் டாக்டர்கள் பலர் ஒரே வாரத்தில் பணியிட மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது; அரசின் எம்.ஜி.ஆர்., மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்துவதற்கு முன், டாக்டர்களின் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். தற்போதைய காலிப்பணியிட விவரம்: தலைமை அரசு மருத்துவமனை மூன்று; உடுமலை அரசு மருத்துவமனை 15 பேர்; காங்கயம், ஜல்லிப்பட்டியில் தலா ஒரு டாக்டர்; தாராபுரம் 4 பேர்; அவிநாசி 9 பேர்; பல்லடம் 5 என மொத்தம் 38 டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது. பொது மருத்துவம் சார்ந்த டாக்டர்கள் மட்டுமல்லாது மற்ற டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு தேவைப்படும் 130 டாக்டர் பணியிடங்களில் ஆறு பல் டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். ஒரு கண் மருத்துவர் மட்டுமே மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ளார். டாக்டர்கள் பற்றாக்குறையால் ஒவ்வொரு நோயாளி மீதும் தனிகவனம் செலுத்த முடிவதில்லை; அடுத்தடுத்து வரும் நோயாளியை, முழுமையாக கவனித்து சிகிச்சையளித்து அனுப்ப வேண்டிய நிர்பந்தம், டாக்டர்களுக்கு ஏற்படுகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர் ஆர்வம் காட்ட முடிவதில்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ