திருப்பூர் : தமிழக பள்ளிக்கல்வித்துறையில் உயரதிகாரிகளில் பலரும் இட
மாறுதலுக்கு காத்திருப்பதால், முக்கிய கோப்புகளில் கையெழுத்திடாமல்
தவிர்க்கின்றனர். தமிழகத்தில் கடந்த மே மாதம் அ.தி.மு.க., அரசு
பதவியேற்றது. அதன்பின், காவல் துறை மற்றும் நிர்வாகத்துறையில் மாநில
மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டனர். அதில்,
பெரும்பாலான மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர் மற்றும் எஸ்.பி.,
நியமிக்கப்பட்டனர். தமிழக பள்ளிக்கல்வித்துறையில், தேர்வுத்துறை,
தொடக்கக்கல்வி, மெட்ரிக் பள்ளி, ஆசிரியர் பயிற்சி, பாடநூல் கழகம்,
அனைவருக்கும் கல்வித்திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்
உள்ளிட்ட இயக்குனர் பொறுப்புகளில் ஒன்பது பேரும், 10க்கும் மேற்பட்ட இணை
இயக்குனர் பணியிடங்கள் உள்ளன. மாவட்ட அளவிலான கல்வித்துறையில்
முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர்,
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆகிய பணியிடங்களில் இட மாறுதல் செய்யப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொறுப்பு அதிகாரிகளாக
நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவர்
எனவும் எதிர்பார்க்கப்பட்டது.சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்துவதில்
பிரச்னை ஏற்பட்டு, முடிவுக்கு வராமல் இரண்டு மாதமாக நீடித்தது. இப்பிரச்னை
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்ததால், கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம்
செய்யப்படவில்லை. தற்போது, சமச்சீர் பாடத்திட்டம் குறித்த விவகாரம்
முடிவுக்கு வந்துள்ளது; புத்தகம் வினியோகிக்கும் பணி ஓரளவுக்கு முடிந்து,
கல்வித்துறையில் நிலவி வந்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. கல்வித்துறை
அதிகாரிகள் விரைவில் மாற்றப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் வரும் பிரச்னைகளை தவிர்க்கும் வகையில், முக்கிய கோப்புகளில்
கையெழுத்திடுவதை கல்வித்துறை அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர். மேலும்,
ஓரிரு மாதங்களில் ஓய்வு பெற உள்ள அதிகாரிகளும் எவ்வித கோப்புகளிலும்
கையெழுத்து இடுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.