உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மயில் முட்டையை மீட்டது வனத்துறை :"தினமலர் செய்தி எதிரொலி

மயில் முட்டையை மீட்டது வனத்துறை :"தினமலர் செய்தி எதிரொலி

திருப்பூர் : மயில் முட்டைகள் பாதுகாக்கப்படாமல் வீணடிக்கப்படுகின்றன என புகைப்படத்துடன் 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியான செய்தியை தொடர்ந்து, அவற்றை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.திருப்பூர் அவிநாசி ரோட்டில் காந்தி நகர் பஸ் ஸ்டாப் பின்புறம் தனியார் மில்லுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் பராமரிக்கப்படாமல் உள்ளது. மக்கள் நடமாட்டம் மிக குறைவாக இருப்பதால், அடிக்கடி மயில்கள் வந்து செல்கின்றன. இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட மயில்கள் வாழ்கின்றன; வீட்டின் கூரைகள், மதில் சுவர்கள், அருகில் உள்ள மொபைல்போன் டவர்களில் வந்து அமரும். இரவில் மயில் அகவும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். சில மயில்கள் முட்புதர்களுக்குள் முட்டைகளை இட்டு விட்டு, சிலரின் அச்சுறுத்தலால் அடைகாக்காமல் விட்டு விட்டுச் சென்றுவிடுகின்றன. மயில் முட்டைகள் அழிவதுடன், தேசிய பறவை இனமும் வளர்ச்சி அடையாமல் தடைப்பட்டு போகிறது. கடந்த சில நாட்களாக மயில்கள் இட்டுச்சென்ற இரண்டு முட்டைகள் பாதுகாப்பு இல்லாமல் இப்பகுதியில் கிடந்தன; வனத்துறை எடுத்துச் சென்று பாதுகாக்க வேண்டும் என புகைப்படத்துடன் 'தினமலர் ' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இப்பகுதிக்கு வனச்சரகர் மதிசெல்வன் தலைமையில் நேற்று வந்த வனத்துறை அதிகாரிகள், மயில் முட்டைகளை பத்திரமாக எடுத்துக் கொண்டனர். வனச்சரகர் மதிசெல்வனிடம் கேட்ட போது,''மயில் முட்டையிட்டு நான்கு அல்லது ஆறு நாட்கள் இருக்கும். நாய், பூனை உள்ளிட்டவை முட்டையை சேதப்படுத்தவில்லை. முட்டைக்கு கதகதப்பான வெப்பம் தேவை. தற்போதைக்கு வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும். மயில் அதிகம் இருக்கும் இடங்களுக்கு கொண்டு செல்வோம். அங்குள்ள மயில்கள் அடைகாத்து குஞ்சு பொரிக்கச் செய்யுமா என்று தெரியாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ