உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரு பக்கம் கூட்டணி பேச்சு; மறுபக்கம் இ.கம்யூ., மனு தாக்கல்

ஒரு பக்கம் கூட்டணி பேச்சு; மறுபக்கம் இ.கம்யூ., மனு தாக்கல்

திருப்பூர் : தே.மு.தி.க.,வுடன் இ.கம்யூ., கூட்டணி சேர, பேச்சு நடந்து வருகிறது. இருப்பினும், வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், இரு கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் யாரென, கட்சி தலைமை அறிவிக்காத போதிலும், கட்சி நிர்வாகிகளுடன் சித்திக் மனு தாக்கல் செய்தார். போட்டி வேட்பாளராக ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். திருப்பூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், வார்டு எண் 46-53 மற்றும் 54-60 ஆகிய வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிகளுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் வேட்பு மனுக்களை பெற்றனர். காலை 11.00 மணிக்கு மனு தாக்கல் துவங்கும் முன்பே மாநகராட்சி வளாகம் முழுவதும் வேட்பாளர்களுடன் வந்த ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்தனர். கவுன்சிலர்களுக்கான மனுக்கள் பெறும் பகுதியில் வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வரிசையாக வேட்பாளர் மற்றும் உடன் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 3.00 மணி வரை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.மனுத்தாக்கல் துவங்கிய அரை மணி நேரத்தில் அதிகளவிலான கூட்டம் வரத்துவங்கியது. பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அலுவலகத்தின் கேட்டை மூடினர். வேட்பாளர் மற்றும் உடன் நான்கு பேர் என கணக்கிட்டு உள்ளே நுழைய அனுமதித்தனர். ம.தி.மு.க., வேட்பாளர் நாகராஜனுடன் மாநில அவை தலைவர் துரைசாமி உள்ளிட்டோர் வந்து மனு தாக்கல் செய்தனர். இ.கம்யூ., வேட்பாளர் ரவி கட்சியினர் சிலருடன் வந்து மனு தாக்கல் செய்தார். தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேச்சு தொடர்ந்து வரும் நிலையில், மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், கட்சி சார்பில் மனு தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின், சுயேச்சைகள் சிலர் வரிசையாக வரத்துவங்கினர். காங்., கட்சியின் மாநில சேவா தள துணை செயலாளர் சிவசுப்ரமணி, தான் காங்., கட்சியின் போட்டி வேட்பாளராக களம் இறங்குவதாக கூறி மனு அளித்தார். வேட்பாளரை கட்சி தலைமை இன்னும் அறிவிக்காததால், தான் போட்டியிட விரும்புவதாகவும், மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் கூறினார். பா.ஜ., வேட்பாளர் சின்னசாமியுடன் கட்சி நிர்வாகிகள் மணி மற்றும் கூட்டணி கட்சியான கொ.மு.க., மாநகர செயலாளர் ரவி ஆகியோர் உடன் வந்தனர்.பகல் 12.30 மணியளவில் தே.மு.தி.க., வேட்பாளர் தினேஷ்குமார் கட்சி நிர்வாகிகளுடன் வந்து மனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் திமுதிமுவென கட்சியினர் நுழைந்தனர். கமிஷனர் ஜெயலட்சுமி பலமுறை கூறியும் அக்கட்சியினர் வெளியேறவில்லை. மனு தாக்கல் செய்தபோது, அங்கிருந்த ஆதரவாளர்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். 'இந்த அறைக்குள், இதுபோல் ஓசை எழுப்பக்கூடாது,' என்று கமிஷனர் கண்டித்தார்.காங்., சார்பில் சித்திக் மனு தாக்கல் செய்தார். புறநகர் மாவட்ட தலைவர் கோபி, முன்னாள் எம்.பி., குப்புசாமி, காங்., பிரமுகர் ரவிக்குமார் உள்ளிட்டோர் வந்தனர். சித்திக் மனு தாக்கல் செய்து வெளியே வரும் வரை, தி.மு.க.,வினர் அடுத்த அறையில் காத்திருந்தனர். தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, வேலம்பாளையம் நகர செயலாளர் மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். இரண்டு பொலிரோ, இரண்டு இன்னோவோ, ஒரு பஜிரோ வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அதற்கு முன்னதாகவே, அலுவலக வளாகத்தில் கட்சி சின்னம் கொண்ட பேட்ஜ் அணிந்து தொண்டர்கள் காத்திருந்தனர்.நேற்று பகல் 1.30 முதல் 3.00 மணி வரை ராகு காலம் என்பதால் பகல் 1.30 மணிக்கு முன்னதாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கட்சியினர்பரபரத்தனர். 1.15 மணிக்கு காங்., கட்சியினர் வெளியே வந்ததும், உடனடியாக தி.மு.க.,வினர் மனு தாக்கல் செய்ய விரைந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் கட்சியினர் அதிகளவில் நுழைந்தனர். வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் இருவரும், குறிப்பிட்ட சிலர் தவிர மற்றவர்கள் அறைக்கு வெளியே இருங்கள் என்று கூறியும், அவர்கள் கேட்கவில்லை; பலர் அங்கேயே இருந்தனர்.மதுபாட்டில் மாலை: சிவசேனா சார்பில் மனு அளித்த வேட்பாளர் சரவணனுடன் வந்த ஆதரவாளர் ஒருவர் கழுத்தில் மது பாட்டில்களை மாலையாக அணிந்தபடி, கையில் கிரில் சிக்கனுடன் வந்தார். கோழி மற்றும் மது பாட்டிலை வாங்கி, ஓட்டுப்போடும் நிலை மாற வேண்டும்; இதை வாக்காளர்கள் உணர வேண்டும் என்பதற்காக இதுபோல வந்ததாக அவர் தெரிவித்தார். மாநகராட்சி அலுவலக வளாகத்துக்குள் மதுபாட்டிலுடன் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், அதை கழற்றி மற்றொருவரிடம் கொடுத்தார்.கடைசி நேர மாற்று வேட்பாளர்: பா.ம.க., வேட்பாளர் வடிவேல், பகல் 2.45 மணிக்கு மனைவி அமிர்தவல்லியை மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்ய அழைத்து வந்தார். கட்சி தலைமை மாற்று வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்று கூறியதால், உடனடியாக வேட்பு மனு தயார் செய்து, கடைசி நேரத்தில் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Arul. K
செப் 23, 2025 13:57

பள்ளி நடைபெறும்பொழுது உட்கூரைப்போச்சு விழுந்திருந்தால் குழந்தைகளின் நிலைமை என்னவாயிருக்கும் என்று வருத்தப்படுவதா


Moorthy
செப் 22, 2025 14:36

40 % அன்பளிப்பு


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ