உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மதுக்கடைகளில் விற்பனை குறைவு :"டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு

மதுக்கடைகளில் விற்பனை குறைவு :"டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் விற்பனை குறைந்து வரும் மதுக்கடைகள் குறித்த விவரங்கள்; விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து 'டாஸ்மாக்' அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். திருப்பூர் கலால் மாவட்டத்தில், 250 மதுக்கடைகள் செயல்படுகின்றன; நகர பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில், மாதந்தோறும் 65 கோடி முதல் 70 கோடி ரூபாய் சரக்குகள் விற்பனையாகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்கள் மற்றும் தேர்தல் நேரங்களில், மது விற்பனை வழக்கத்தில் இருந்து 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பது வழக்கம். தற்போது உள்ளாட்சி தேர்தல் 'களை' கட்டி வரும் நிலையில், மதுக்கடைகளில் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது; தீபாவளியும் நெருங்குவதால், மது விற்பனையை அதிகரிக்கவும், விற்பனையில் குறிப்பிட்ட இலக்கை அடையவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, விற்பனை குறைந்து வரும் மதுக்கடைகள், விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில், மாவட்ட அளவில், 74 கடைகளில் மதுபானம் விற்பனை வழக்கத்தை விட, குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விற்பனை குறைய காரணம், விற்பனையை அதிகரிக்க, வழிமுறை குறித்து ஆய்வு நடக்கிறது. கடந்த சில தினங்களாக, மது விற்பனை குறைந்துள்ள மதுக்கடைகள்; அக்கடைகளில் இருப்பில் உள்ள 'பிராண்டட்' சரக்குகள் குறித்து, 'டாஸ்மாக்' அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கை குறித்தும் அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை நடக்கிறது. கடந்தாண்டு தீபாவளியின் போது, மது விற்பனை 11.13 கோடி ரூபாயாக இருந்தது; தீபாவளிக்கு முந்தைய நாள் (4ம் தேதி) ரூ.3.97 கோடிக்கு சரக்கு விற்றது; தீபாவளி தினமான 5ம் தேதி, ரூ.4.16 கோடி; மறுநாள் (6ம் தேதி) ரூ.3 கோடிக்கு விற்றது. கடந்த 2009ம் ஆண்டு விற்பனையோடு ஒப்பிடும்போது, 1.10 கோடி ரூபாய்க்கு விற்பனை அதிகரித்திருந்தது. அதேபோல், இந்தாண்டும் விற்பனையை அதிகரிக்க, அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி