உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிற மொழிப்பாட மாணவர்களுக்கு எந்த புத்தகம்?:அரசு அறிவிப்புக்காக காத்திருப்பு

பிற மொழிப்பாட மாணவர்களுக்கு எந்த புத்தகம்?:அரசு அறிவிப்புக்காக காத்திருப்பு

திருப்பூர் : இந்தி, பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாண வர்கள், எந்த புத்தகங்களை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக, அரசு அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என அனைத்து வகை பள்ளிகளிலும் ஒரே வகையான பாடத்திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்தாண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, இந்தாண்டு இதர வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது.பிற மாநிலங்களை சேர்ந்த மாண வர்கள், முதல் பாடமாக தமிழ் மொழிக்கு பதிலாக, விருப்பப்பட்ட மொழியை தேர்ந்தெடுத்து படித்து வந்தனர். கட்டாய தமிழ் மொழிச்சட்டம் கொண்டு வரப்பட்ட பின், அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் முதல் பாடமாக கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே பிற மொழி பாடங்களை, முதல் பாடமாக பயின்று வரும் மாணவர்கள் தொடர்ந்து பயில அனுமதிக்கப்பட்டது.தற்போது ஏழாம் வகுப்பு வரை, தமிழ் மொழியை முதல் பாடமாக மாணவர்கள் பயின்று வரு கின்றனர். எட்டு, ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில், பிற மொழி பாடங்களை மாணவர்கள் தொடர்ந்து பயின்று வருகின்றனர்.சமச்சீர் திட்டம் கொண்டு வரப்பட்ட பின், இவர்களில் 8, 9, 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் எந்த புத்தகத்தை பின்பற்றுவது என தெரியாமல் குழப்பம் நிலவி வருகிறது. சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்புத்தகங்கள் மட்டும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.இந்தி, பிரெஞ்ச், சான்ஸ்கிரிட் உள்ளிட்ட பாடங்களுக்கு எந்த புத்தகத்தை பின்பற்ற வேண்டும் என எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், பிற மொழியை முதல் பாடமாக எடுத்து பயின்று வரும் மாணவ, மாணவியர் மத்தியில் குழப்பம்எழுந்துள்ளது.தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், 'மெட்ரிக் பள்ளிகளில் குறைந்த சதவீத மாணவர்கள் மட்டுமே பிற மொழி பாடத்தை பயின்று வருகின்றனர். 8, 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாணவர்கள் பழைய புத்தகத்தையே பின்பற்றி பயில வேண்டுமா, புதிய புத்தகங்கள் வழங்கப்படுமா என்பது தொடர்பாக அரசின் அறிவிப்பை எதிர்பார்த்துள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !