திருப்பூர் : 'தன் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறுவதுடன், ஐந்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈட்டுத்தொகை வழங்க வேண்டும்' என, மேயர் செல்வராஜ் தரப்பில் அவரது வக்கீல், புகார்தாரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திருப்பூர் காந்தி நகர் இ.பி., காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சாமாத்தாள் (54); இவருக்கு சொந்தமான இரண்டு கோடி ரூபாய் சொத்தை, கேரளாவை சேர்ந்த தினேஷ்கானி, திருப்பூர் மேயர் செல்வராஜ், இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் காமாட்சி உள்ளிட்ட ஏழு பேர் மிரட்டி, ஏமாற்றி அபகரித்து கொண்டதாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சாமாத்தாள் புகார் செய்தார். ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வழக்கு குறித்து, மேயர் செல்வராஜிடம் போலீசார் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், வழக்கு தொடுத்த சாமாத்தாளிடம், ஐந்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு, மேயர் தரப்பில் இருந்து சென்னையை சேர்ந்த வக்கீல் சிவப்பிரகாசம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் விவரம்: திருப்பூர் கொங்கு நகர் மூன்றாவது வீதியை சேர்ந்த செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயராக உள்ளார். செல்வராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது, சொத்தை அபகரித்து கொண்டதாக சாமாத்தாள், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. தற்போது திருப்பூர் மாநகராட்சி மேயராகவும், இதற்கு முன் திருப்பூர் நகராட்சி தலைவராகவும் செல்வராஜ் இருந்துள்ளார். 30 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறார். செல்வராஜ் மீது அளிக்கப்பட்ட இத்தகைய பொய் புகாரால், அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது; அவரும் அவரது குடும்பத்தாரும் கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளனர். செல்வராஜ் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும்; செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்படுத்திய பாதிப்புக்காக, ஐந்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.