திருப்பூர் : திருப்பூர் நொய்யல் ஆற்றோரத்தை ஒட்டி வரும் கஜலட்சுமி தியேட்டர் ரோட்டில், பஸ்கள் வருவதால் விபத்துகளின் வாய்ப்பு அதிகரிக்கிறது. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஊத்துக்குளியில் இருந்து திருப்பூர் நோக்கி வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள், 2வது ரயில்வே கேட் பகுதியில் திருப்பி விடப்படுகிறது; கே.பி.என்., காலனி வழியாக மின்மயான ரோடு வந்து, நொய்யல் பாலம் வழியாக யுனிவர்சல் ரோட்டில் சென்று எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பு பகுதியில் பஸ்கள் திரும்பி செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மின்மயான ரோடு வழியாகவரும் பல பஸ்கள், யுனிவர்சல் ரோடு வழியாக செல்லாமல், ராம்லட்சுமண் தியேட்டர் பகுதியில் பிரிந்து பாலம் வழியாக ஏறி, நொய்யல் ஆற்றோரம் வழியாக கஜலட்சுமி தியேட்டர் ரோட்டில் வந்து, வளர்மதி பஸ் ஸ்டாப்பை அடைகிறது; அங்கிருந்து முனிசிபல் ரோட்டை அடைந்து, பஸ் ஸ்டாண்டை நோக்கி செல்கிறது. எம்.ஜி.ஆர்., சிலை முன், சிக்னல் பகுதியில் போக்குவரத்து காரணமாக, அவ்வழியாக வரும் வாகனங்கள் ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பின் அனுப்பப்படுகின்றன; அதை தவிர்க்க பல டிரைவர்கள், இவ்வாறு மாற்று வழித்தடத்தில் பஸ்களை இயக்குவதை வழக்கமாககொண்டுள்ளனர்.கஜலட்சுமி தியேட்டர் ரோடு மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பாலம் ஆகிய இரு இடங்களில் பஸ் வளைந்து, திரும்பி செல்கிறது; கஜலட்சுமி தியேட்டர் ரோட்டில், குறுக்கு சந்து வீதிகளின் வழியாக வரும் வாகனங்கள் அதிகளவில் உள்ளன; முனிசிபல் வீதி வழியாக வரும் பல வாகனங்கள், ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு செல்ல, கஜலட்சுமி தியேட்டர் ரோடு வழியாக திரும்பி வருகின்றன. நொய்யல் ஆற்றோர பகுதியில், ரோட்டோர குடியிருப்புவாசிகளும் உள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரோட்டோரத்தில் வசிக்கின்றன. 'டாஸ்மாக்' மதுக்கடை முன் டூவீலர்கள், அதற்கு எதிரில் வாகன ஸ்டாண்டும் ரோட்டோரத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், கஜலட்சுமி தியேட்டர் ரோட்டில் பஸ்கள், கண்மூடித்தனமான வேகத்தில் வருகின்றன; சில நேரங்களில் காது ஜவ்வு கிழியும்படி 'ஹாரன்' ஒலி எழுப்பப்படுகிறது. குறுகிய இவ்வழித்தடத்தில் பஸ்கள் வரும்போது, எதிரில் செல்பவர்கள் குறிப்பாக டூவீலர் மற்றும் கார்களில் வருபவர்கள் ஒதுங்கி செல்ல வழியில்லை. தியேட்டரில் காட்சி முடியும் நேரங்களில், அப்பகுதியில் நடந்து செல்லும் மக்கள் கூட்டமும் மிகுதியாக உள்ளது. விபத்து பயத்தில் மக்கள் அலறுகின்றனர்.இவ்வழித்தடத்தில் பஸ்கள் செல்வதை தடுக்க போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முன்வர வேண்டும்; விதிமீறும் பஸ் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.