| ADDED : ஆக 14, 2011 10:32 PM
உடுமலை : சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளான பிறகு கிராமத்திற்கு முதன் முதலாக பஸ் இயக்கப்பட்டதை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். குடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட முத்துசமுத்திரம் மற்றும் மசகவுண்டன்புதூர் கிராமங்கள் பல்லடம் ரோட்டிலிருந்து 3 கி.மீ., தூரம் தள்ளி உள்ளது. கிராமத்திற்கு பஸ் இயக்க வேண்டி பல ஆண்டுகளாக கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். பள்ளி மாணவர்களும், கிராம மக்களும் நாள்தோறும் 3 கி.மீ., தூரம் நடந்து வந்து குடிமங்கலத்தில் பஸ் ஏறி வந்தனர்.சட்டசபை தேர்தல் முடிந்ததும், உடுமலை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் மாவட்ட நிர்வாகம், கிளை போக்குவரத்து கழக மேலாளர் ஆகியோரிடம் முத்துசமுத்திரம் உட்பட மூன்று கிராமங்களுக்கு பஸ் இயக்க வலியுறுத்தப்பட்டது. கடந்த 28 ம் தேதி மூங்கில்தொழுவு பிரிவில் நடந்த மனுநீதி நாள் முகாமில் முத்துசமுத்திரத்திற்கு பஸ் இயக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். கிராமத்திற்கு முதன்முதலாக பஸ் வருவதை வரவேற்க நேற்று முன்தினம் கிராம மக்கள் மற்றும் ஊராட்சி சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குடிமங்கலம் ஊராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் விழா நடத்தப்பட்டது. உடுமலை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் கிராமத்திற்கு பஸ்சை இயக்கி வைத்தார். இதனையடுத்து, கிராம மக்கள் முதன்முதலாக இயக்கப்பட்ட பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். இவர்களுடன் ஊராட்சி நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் பயணம் செய்தனர். கிராமத்திற்கு சென்ற பஸ்சை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.இந்த பஸ் குடிமங்கலத்திலிருந்து முத்துசமுத்திரம், மசகவுண்டன்புதூர், வசவநாயக்கன்பட்டி, பூளவாடி வழியாக முத்தூருக்கு இந்த பஸ் ஒரு 'டிரிப்' மட்டும் இயக்கப்பட உள்ளது. கிராம மக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் கூடுதல் டிரிப் இயக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.