உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

திருப்பூர் : போக்குவரத்து விதியை மீறி சரக்கு ஆட்டோ, டெம்போ மற்றும் லாரிகளில் ஆட்களை ஏற்றிச்செல்வது, திருப்பூரில் அதிகரித்து வருகிறது.சரக்குகளை ஏற்றிச்செல்ல பயன்படும் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்ற விதிமுறையை மீறி திருப்பூர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆட்களை ஏற்றிச்செல்வது தொடர்கதையாக உள்ளது.பயணம் செய்ய தகுதியில்லாத அவ்வாகனங்களில் அதிகளவில் ஆட்கள் ஏறி பயணம் செய்வதோடு, அமர வசதியில்லாத வாகனங்களிலும், அமர்ந்தும், நின்று கொண்டும், நெரிசலுடன் ஆபத்தான பயணத்தை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் விசேஷங்களுக்கு செல்வதற்கு, சரக்கு வாகனத்தில் குறைந்த வாடகை என்பதால் ஆபத்தான பயணத்தில் ஈடுபடுகின்றனர். சரக்கு வாகன டிரைவர்களும் வருவாயை கருத்தில் கொண்டு விதிமுறை மீறி மக்களை ஏற்றிச் செல்கின்றனர். நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட, அதிவேகமாகவும் இயக்குகின்றனர்.பயணத்துக்கு தகுதியில்லாத அவ்வாகனங்களில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டும், அமர்ந்து கொண்டும் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து பலியாகும் சம்பவங்களும், ஆட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் அவ்வப்போது நிலை தடுமாறி கவிழ்ந்து விழும் சம்பவங்களும் நடந்துவருகின்றன.மாதத்தில் சராசரியாக 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைவதும், ஐந்துக்கும் மேற்பட்டோர் பலியாவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தாராபுரம், குண்டடம் பகுதிகளில் நடந்த சரக்கு வாகன விபத்துக்களில் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றிச்செல்வதை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி